மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளாக இருக்கும் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக களம் காணவிருக்கின்றது.
இந்நிலையில் சேலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுகையில், “ கூட்டணியிலிருந்து பாஜக சென்றதில் எனக்கு தனிப்பட்ட வருத்தம் என்றாலும், இனி அதிமுகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது உறுதி. மதக் கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள்” என்று பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதனைப் பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



Also Read: வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு; திமுக ஆட்சி காரணமா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்டில் கடந்த ஞாயிறன்று (06/02/2022) சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேற்காணும் கூற்றை பேசியதாக குறிப்பிடப்பட்டிருப்பதால், உண்மையிலேயே அவர் அன்றைய தினத்தில் இவ்வாறு பேசினாரா என்பதை உறுதி செய்ய, உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இதுகுறித்து இணையத்தில் தேடினோம்.
இத்தேடலில் கடந்த ஞாயிறன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வனவாசி, நங்கவள்ளி, ஜெலகண்டபுரம் பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றிய வீடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது.
இவ்வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் பாஜக குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கவே இல்லை. மாறாக திமுக குறித்தும் திமுக தலைவர்கள் குறித்தே பேசியிருந்தார்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில்“முதல்வர் வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி வருகிறார் தேர்தலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெற்றி பெற்ற பின்பு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை” என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆற்றிய உரையின் அடிப்படையில் தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
தந்தி தொலைக்காட்சியின் இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவர்களும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை உறுதி செய்தனர்.
Also Read: தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புகின்றனரா?
Conclusion
மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும்.
இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)