வீடு மற்றும் கடை வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பரிந்துரையின் பேரிலேயே வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி. வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும்-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதா?
Fact Check/Verification
வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் நியூஸ்கார்டு தந்தி டிவி லோகோவுடன் இருந்த நிலையில் “இதுவரை இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் ₨1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ” என்கிற செய்தி வெளியான நியூஸ் கார்டினை எடுத்து குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது நமக்கு தெளிவாகியது.


தொடர்ந்து, தந்தி டிவி தரப்பில் டிஜிட்டல் பிரிவின் வினோத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது, “குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது; எங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்திலேயே குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்துள்ளோம்” என்று விளக்கமளித்தார்.
மேலும், PIB Fact check சமூக வலைத்தளப்பக்கத்திலும் குறிப்பிட்ட நியூஸ்கார்டு மற்றும் செய்தி போலியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion
வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Thanthi TV
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)