இராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் எனும் இளைஞர் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியதால் முஸ்லிம் மதவாதிகளால் கொல்லப்பட்டார் எனும் செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Fact Check/Verification
இராமநாதபுரம் கள்ளர் தெருவில் வசித்து வந்தவர் அருண்பிரகாஷ்(23). அதே பகுதியில் வசித்து வந்தவர் யோகேஸ்வரன்(20). இவ்விருவரும் திங்கட்கிழமை மாலை அவர்களின் தெரு முனையில் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு இவர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இவ்விருவரையும் அக்கம்பக்கத்திலிருந்தோர் தலைமை அரசு மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அருண் பிரகாஷ் மருத்துமனையிலேயே இறந்துவிட்டார். யோகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தினமணி, இந்து தமிழ் உள்ளிட்ட இணையத்தளங்களில் செய்தி வெளிவந்திருந்தது.


இந்நிலையில் அருண்பிரகாஷ் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்காக முஸ்லீம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இப்படுகொலையை நிகழ்த்தியதாக சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
பாஜக தமிழ்நாடு, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ஊடகவியலாளர் மாரிதாஸ் போன்றோரும் இப்பிரச்சனைத் தொடர்பாக தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இவ்விஷயத்தை ஆராய முடிவெடுத்தோம்.
உண்மை என்ன?
நம் மேற்கண்ட சம்பவத்தைக் குறித்து ஆராய்ந்தபோது, இராமநாதபுர மாவட்டக் காவல்துறையின் அதிகாரப் பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில் இச்சம்பவம் குறித்த பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. அதில்,
“இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இப்படிக்கு,
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
என்று பதிவிடப்பட்டிருந்தது.
மேற்கண்ட பதிவின் மூலம் இரு கோஷ்டிகளுக்கிடையே நடைப்பெற்ற தகராறின் காரணமாகவே இந்த பயங்கர சம்பவம் நடைப்பெற்றுள்ளது என்று நமக்கு தெளிவாகிறது. இதைத் தவிர்த்து இதன்பின் மத ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் இராமநாதபுரத்தில் ஏற்பட்ட இளைஞரின் கொலைக்கு முன்விரோதம்தான் காரணம் என்று தெளிவாகியுள்ளது.
சந்தர்ப்பவாதிகள் தங்களின் அரசியல் ஆதாரங்களுக்காக இச்சம்பவத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதையும் தெளிவாக உணர முடிகிறது.
ஒரு கோஷ்டி மோதலை இரு மதத்தினருக்கு எதிரானப் பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பது கண்டிக்கத் தக்க விஷயமாகும்.
Result: False
Our Sources
BJP Tamilnadu Twitter Profile: https://twitter.com/BJP4TamilNadu/status/1300607020320481280
H.Raja Twitter Profile: https://twitter.com/HRajaBJP/status/1300802771298394115
Maridass Twitter Profile: https://twitter.com/MaridhasAnswers/status/1300714151694577665
Ramanathapuram District Police Facebook Profile: https://www.facebook.com/ramnaddistrictpolice/photos/a.1738932649684595/2855574308020418/
Tamil Hindu: https://www.hindutamil.in/news/tamilnadu/573087-murder-at-ramanathapuram.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)