தமிழிசை செளந்தராஜன் மீதும் என் மீதும் உள்ள வன்மத்தை நாடார் சமூகம் மேல் காட்டுகிறார் ஹெச்.ராஜா என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“ஹெச்.ராஜாவுக்கு கண்டனம். நாடார்கள் தமிழர்கள் அல்ல என ஹெச்.ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் கோவத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு.
முன்னாள் மத்திய அமைச்சர்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
தமிழிசை மீதும், என் மீதும் உள்ள வன்மத்தை நாடார் சமூகம் மேல் காட்டுகிறார் ஹெச்.ராஜா என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, ஹெச்.ராஜா குறிப்பிட்ட சமூகத்தை தமிழர்கள் அல்ல என்று பேசியிருந்தாரா என்பது குறித்து ஆராய்ந்தோம், உலக பிராமண சமூக நல சங்க 11ஆம் ஆண்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். அவரது உரையில் ”கால்டுவெல் எழுதிய ‘திருநெல்வேலி சாணார்கள்’ என்கிற புத்தகத்தில் அவர் நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எழுதியுள்ளார்; காரணம் அவர் நம்முடைய நாடார் சமூக மக்களை அங்கு வந்தவுடன் மதம் மாற சொன்னார். ஆனால், அவர்கள் மதம் மாற ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை வந்தேறிகள் என்று கூறியுள்ளார் ” என்று பேசியிருந்தார். இதுகுறித்த உண்மையறியும் சோதனையை நம்முடைய நியூஸ்செக்கர் தமிழில் வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில், அவர் நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று பேசியதாகவும், அவர் மீதும், தமிழிசை செளந்தராஜன் மீதும் இருக்கும் கோபத்தையே இவ்வாறு ஒரு சமூகத்தின் மீது காட்டியுள்ளார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
ஆனால், அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் அவர்களுடைய பக்கத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார். மேலும், அதனை போலியானது என்று முத்திரையிட்டு நமக்கு அனுப்பி வைத்தார்.

எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
Also Read: மதுபானக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் என்று பரவும் செய்தி உண்மையா?
Conclusion
தமிழிசை மீதும், என் மீதும் உள்ள வன்மத்தை நாடார் சமூகம் மேல் காட்டுகிறார் ஹெச்.ராஜா என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from, News Checker Tamil, Dated March 25, 2025
YouTube Video From, Polimer News, Dated March 23, 2025
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital, Dated March 25, 2025