காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் முதன்முறையாக நடந்து மக்கள் சுதந்திர காற்றினை சுவாசிக்கின்றனர் என்பதாகப் புகைப்படத் தகவல் மற்றும் வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்துக்களின் பண்டிகையாகவும், வடமாநிலத்தவர்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ணனின் பிறந்த தினமான “கோகுலாஷ்டமி” அல்லது “கிருஷ்ண ஜெயந்தி”.
கடந்த திங்களன்று இப்பண்டிகை மக்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் ஸ்ரீநகரிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, “காங்கிரஸ் ஆட்சியில் துப்பாக்கி சத்தம் மட்டுமே கேட்ட காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.75 ஆண்டு கால தீவிரவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்து அனைத்து மதத்தினரும் சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த ஒற்றை செயலுக்காகவே உம்மை காலந்தோறும் போற்றும் பாரத சமுதாயம் .” என்பதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தாய் மற்றும் மகள் குறித்து தவறான கருத்தைக் கூறினாரா தந்தை பெரியார்?
Fact check/ Verification:
காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது முதன்முறையாக மோடி ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, Outlook இதழில் வெளியாகியிருந்த இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு காஷ்மீரில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதாக கட்டுரை வெளியாகியிருந்தது. மேலும், வைரல் புகைப்படத்திலேயே ராணுவ பாதுகாப்பு வாகனம் மற்றும் வீரர்கள் கொண்டாட்டத்தின் போது இருப்பதும் இடம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா பரவலால் சரியாக கொண்டாடப்படாமல் இருந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இந்த வருடம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதற்கு முன்பாக கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காஷ்மீரில் கொண்டாடப்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்தபோது, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாட்டம் குறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வெளியாகியிருந்த புகைப்படங்களையும் நம்மால் அறிய முடிந்தது.


தொடர்ந்து, கடந்த 2007 ஆம் ஆண்டு காஷ்மீர், ஸ்ரீநகர், லால் செளக்கில் 1989 ஆம் ஆண்டிற்கு பிறது முதன்முறையாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டக் கூட்டம் கடந்து சென்றதாக காஷ்மீர் பண்டிட் ஒருவரின் கருத்துக்களோடு ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றும் நமக்குக் கிடைத்தது.
எனவே, காஷ்மீரில் முதன்முறையாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடக்கிறது என்பதாகப் பரவும் புகைப்படத் தகவலில் உண்மையில்லை என்பது நமக்குத் தெரிய வந்தது.
Conclusion:
காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது முதன்முறையாக மோடி ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)