Authors
Claim: மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரம்.
Fact: இத்தகவல் தவறானதாகும். இந்த விளம்பரமானது மகளிர் தினத்தை முன்னிட்டு பிரகா நியூஸ் வெளியிட்ட விளம்பரமாகும்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள அசத்தல் வீடியோ.. உண்மையில் நாரி ஷக்தியை மதிப்பது என்றால் திராவிட மாடல் ஆட்சியை போல அவர்களின் உழைப்பை அங்கீகரிப்பது தானே தவிர பேடி பச்சாவோ போல விளம்பரங்கள் செய்வதல்ல. மகாலட்சுமி திட்டம் கடைக்கோடி கிராமங்கள் வரை பெரும் புயலை கிளப்பியுள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை பார்த்து இரண்டு வேலை செய்வதை குறித்து கேள்வி எழுப்புவதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம் குறித்து மேடையில் பேசும் வீடியோ இடம்பெற்றிருந்தது.
மகாலட்சுமி திட்டம் என்றால் என்ன?
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் மகாலட்சுமி எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பெண்களில் மூத்தவருக்கு வருடத்திற்கு ஒரு இலட்சம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக பலரும் மேற்கண்ட வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
Fact Check/Verification
மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரம் செய்தததாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “Prega News Missed The Mark With Its Latest “Empowering” Ad” என்று தலைப்பிட்டு யூத் கி அவாஸ் எனும் ஊடகம் மார்ச் 09, 2022 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் பிரகா நியூஸ் பெண்களின் கர்ப்பம் குறித்த அவர்களின் சுதந்திரத்திற்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் வெளியிட்டதாக பரப்பப்படும் விளம்பரத்தின் காட்சிகள் முகப்பு படமாக வைக்கப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து பிரகா நியூஸின் யூடியூப் சேனலில் தேடுகையில் ‘Celebrate Women’s Day 2022 With Prega News | #SheCanCarryBoth’ என்று தலைப்பிட்டு பிப்ரவரி 19, 2023 அன்று விளம்பரம் ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 40 ஆவது நொடியில் வைரலாகும் வீடியோவில் வரும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இந்த விளம்பரத்தை முழுமையாக கண்டப்பின் இந்த விளம்பரத்துக்கும் மகாலட்சுமி திட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிய முடிந்தது. இந்த விளம்பரமானது பெண்கள் கர்ப்பமானாலும் பிடித்த வேலையை செய்யலாம் எனும் கருத்தை தெரிவிப்பதாக இருந்தது.
இதனையடுத்து தேடியதில் SG Dream Media எனும் விளம்பர நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரகா நியூஸ் நிறுவனத்துக்கு இந்த விளம்பரத்தை உருவாக்கியதாக கூறி இதே விளம்பரத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வைரலாகும் வீடியோவை வெளியிட்டிருந்ததா என தேடினோம். இத்தேடலில் மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வேறு ஒரு விளம்பரத்தை உருவாக்கி, அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து மற்றொரு விளம்பரம் தமிழ்நாடு காங்கிரஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இவ்விரண்டு விளம்பரங்களை தவிர்த்து மகாலட்சுமி திட்டம் குறித்து வைரலாகும் இந்த விளம்பரத்தையோ, அல்லது வேறு விளம்பரத்தை காங்கிரஸ் கட்சியோ, அல்லது காங்கிரஸ் நிர்வாகிகளோ உருவாக்கி பகிர்ந்திருக்கவில்லை.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பிரகா நியூஸின் விளம்பரத்தின் சில பகுதிகளையும் மகாலட்சுமி திட்டம் குறித்த ராகுல்காந்தி பேச்சையும் இணைத்து வைரலாகும் இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்த விளம்பரத்துக்கும் காங்கிரஸுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் அறிய முடிகின்றது.
Also Read: கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்ததா?
Conclusion
மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக வைரலாகும் வீடியோ தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Article By Youth Ki Awaaz, Dated March 9, 2022
YouTube Video By Prega News, Dated February 19, 2022
Facebook Post By SG Dream Media, Dated February 19, 2022
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)