Fact Check
காவி புடவை கட்டியதால் கைது செய்யப்பட்ட பெண்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Claim
மைசூரில் காவி புடவை கட்டியதால் கைது செய்யப்பட்ட பெண்.
Fact
இத்தகவல் தவறானதாகும். அப்பெண் ‘சாமுண்டி சலோ’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர் என்று தவறாக புரித்துக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்; காவி புடவை கட்டியதால் அல்ல.
கர்நாடகாவின் மைசூரில் காவி புடவை அணிந்ததால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“மாதா சாமுண்டா தேவி கோயிலுக்கு வெளியே, ஒரு மரியாதைக்குரிய பெண்மணி தனது கணவருக்காகக் காத்திருக்கிறார், அவர் கோவிலிலிருந்து திரும்பவிருக்கிறார்.
கர்நாடக போலீசார் வந்து அவரை ஒரு போலீஸ் வேனில் தள்ளிவிடுகிறார்கள். அந்தப் பெண் அழத் தொடங்குகிறார்.
இந்த எளிமையான, மரியாதைக்குரிய பெண்ணின் குற்றத்தைக் கண்டறியவும்.
அவள் காவி நிற புடவை அணிந்திருந்தாள்.
வீடியோ இல்லையென்றால், இந்த சம்பவத்தை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். காங்கிரசின் இந்து எதிர்ப்பு விரக்தி, அற்பத்தனம் மற்றும் ஹிட்லரிசம் இப்போது எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டன”
என்று குறிப்பிட்டு இவ்வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Fact Check/Verification
கர்நாடகாவின் மைசூரில் காவி புடவை அணிந்ததால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோவில் டிவி9 கன்னடா மற்றும் நியூஸ் 18 கன்னடா ஊடகங்களின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் வைரலாகும் வீடியோ மைசூர் ‘சாமுண்டி சலோ’ ஆர்ப்பட்டத்திற்கு தொடர்புடையது என அறிய முடிந்தது. அதுக்குறித்த வீடியோக்களை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்ற பெண்ணை போலீசார் அவர்களது வாகனத்தில் ஏற்ற முயற்சிப்பதையும், அவரின் கணவர் வந்தபிறகு விடுவிக்கப்பட்டதையும் இவ்வீடியோக்களில் காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் மைசூரில் நடந்த சாமுண்டி சலோ ஆர்ப்ப்பாட்டத்தின்போது வீடியோவில் காணப்பட்ட பெண் போராட்டத்தில் கலந்துக்கொண்டவர் என்று தவறுதலாக புரிந்துக்கொண்டு கைது செய்யப்பட்டதாக கன்னடபிரபா வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் ஸ்டார் ஆஃப் மைசூர் ஊடகத்தில் அத்தம்பதியினர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் மகளுக்கு வேலை கிடைத்ததற்காக சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சனை காரணமாக அவர்கள் கோவிலுக்கு செல்லாமல் பெங்களூர் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சலோ சாமுண்டி போராட்டமும் அதன் பின்னணியும்
மைசூர் நவராத்திரி விழாவுக்கு சிறுபான்மையினத்தை சார்ந்த எழுத்தாளரான பானு முஷ்தக் அழைக்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து பானு முஷ்தக் கன்னட மொழி குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகியது.
அதில் கன்னட மொழியிலிருந்து மற்ற மதத்தினரை விலக்கி வைக்க கன்னட மொழியை இந்துக்கடவுளாக மாற்றிவிட்டீர்கள் என்று அவர் பேசி இருப்பதை காண முடிந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் “சாமுண்டி கோவில் ஒரு அரசு கோவில். எந்த மதத்துக்கும் சொந்தமானது அல்ல. இங்கு யாரும் வரலாம்” என்று பேசி இருந்தார்.
இது மேலும் கொதிப்பை ஏற்படுத்திய நிலையில் செப்டம்பர் 9, 2025 அன்று இந்து ஜக்ரான் வேதிகே எனும் அமைப்பு சார்பில் மைசூரில் சலோ சாமுண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
Also Read: தவெக தலைவர் விஜய் இயக்குனர் S.A.சந்திரசேகரின் சொந்த மகனில்லை என்று பரவும் தவறான தகவல்!
Conclusion
கர்நாடகாவின் மைசூரில் காவி புடவை அணிந்ததால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். அப்பெண் ‘சாமுண்டி சலோ’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர் என்று தவறாக புரித்துக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்; காவி புடவை கட்டியதால் அல்ல.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by TV9 Kannada, dated September 9, 2025
Report by News 18 Kannada, dated September 9, 2025
Report by Kannadaprabha, dated September 9, 2025
Report by Star of Mysore, dated September 9, 2025