Fact Check
இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா?

Claim: இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினார்.
Fact: வைரலாகும் வீடியோ 2006 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் நடந்து முடிந்த 2024 பொதுத்தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
“உங்களால் தான் எனக்குக் கிடைக்க வேண்டிய எம்.பி சீட்டுகள் கிடைக்காமல் படுதோல்வி என காங்கிரஸ் இந்தி கூட்டணியினரை வசை பாடும் மம்தா தீதி. சொந்தமா ரெண்டு சீட்டு கூட வாங்க வக்கில்லாத முட்டாப்பய ராகுல் காந்தி எனவும் திட்டித் தீர்த்தார். மோதிக்கு ஒன்சைட் வெற்றி இது எனப் பாராட்டினார்” என குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாதக-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு உண்மையானதா?
Fact Check/Verification
இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோவை AI கருவியை பயன்படுத்தி மொழிப்பெயர்த்தில் போலீசார் அவரை தாக்கியதாக மம்தா பேசி இருந்ததை காண முடிந்தது. இதில் ராகுல் காந்தி குறித்தோ, இந்தியா கூட்டணி குறித்தோ அவர் பேசி இருக்கவில்லை.
தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்ததில் “Mamata Banerjee ransack the West Bengal Assembly” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவின் நீள வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த வீடியோவானது ஏப்ரல் 18, 2011 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவ்வீடியோவை அடிப்படையாக வைத்து தேடியதில் “Mamata on rampage in WB Assembly” என்று தலைப்பிட்டு நவம்பர் 30, 2006 அன்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து NDTV வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

கொல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் ஸ்ரிங்கூரில் ஏறக்குறைய 1000 ஏக்கர் நிலங்களை டாடா மோட்டார்ஸ்க்கு அரசு வழங்கியயதை எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி மம்தா பானர்ஜி ஸ்ரிங்க்கூருக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சித்தப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தேடியதில் 2020 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் தான் தகராறில் ஈடுபடவில்லை என்று மம்தா மறுத்ததையும், அதற்கு பதிலடி தரும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த சுஜன் சக்ரபர்த்தி வைரலாகும் வீடியோவுக்கு தொடர்புடைய மற்றொரு வீடியோவை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
- வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு முன்பு, 2006 ஆம் ஆண்டில் நடந்துள்ளது.
- இவ்வீடியோவுக்கும் நடந்து முடிந்த 2024 பொதுத்தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
- இவ்வீடியோவில் மம்தா பானர்ஜி ராகுல் காந்தி குறித்தோ அல்லது இந்தியா கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை. மம்தா அவரை ஸ்ரிங்கூருக்குள் அனுமதிக்காத போலீஸ் குறித்தே பேசியுள்ளார்.
Conclusion
இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Youtube Video, Dated April 18, 2011
Report from NDTV, Dated November 30, 2006
Report from TOI, Dated November 30, 2006
Facebook Post from Sujan Chakraborty, Dated February 15, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)