Fact Check
பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டதா நாதக?
பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டு நாம் தமிழர் கட்சி டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது.

கடந்த செவ்வாயன்று ( 21/12/2021) தருமபுரி மாவட்டம் ஆரூர் தொகுதியில் உள்ள மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது தீடீரென்று திமுகவினர் சிலர் மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விசிக தலைவர் திருமாவளவன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலிருந்து நிதி கேட்டு டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் அந்த ஸ்க்ரீன்ஷாட்டில்,
“மொரப்பூரில் இன்று திமுக ரவுடியால் தாக்கப்பட்டதைப்போல மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கிறோம். பேச்சாளர்களுக்கு உடற்பயிற்சிக் கூட கட்டணம், பாதாம், முந்திரி பருப்பு வகைகள், இறைச்சி ஆகியவற்றிற்கான செலவினங்களை அதிகரிக்க உள்ளோம்.
நிதி வழங்குக.”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



Also Read: ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டு நாம் தமிழர் கட்சி டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை காணும்போதே அது போலியானதுதான் என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது.
அதேபோல் எதிர்கட்சி தலைவர், ஆளுங்கட்சி கூட்டணி தலைவர் என கட்சி பாகுபாடின்றி கண்டிக்கும் ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து நாம் தமிழர் கட்சி நிதி சேகரிக்க முயன்றது என்பதும் ஏற்புடையதாக அல்ல.
இருப்பினும் பலர் இதை உண்மை என்று நம்பி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால், இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து விளக்க விரும்பினோம்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் டிவீட் இடம்பெற்றுள்ளதா எனபதைத் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு டிவீட் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் டிவீட் குறித்து கேட்டோம்.
இதற்கு அவர்,
“இது போலியான டிவீட், இவ்வாறு ஒரு டிவீட்டை நாங்கள் பதிவிடவே இல்லை.”
என்று விளக்கமளித்தார்.
Also Read: மாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?
Conclusion
பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டு நாம் தமிழர் கட்சி டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Packiya Rajan, Spokes Person, NTK
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)