ரெம்டிசிவிர் மருந்துகள் கிடைக்காமல் இந்திய மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக மருந்துகள் பஞ்சாப் கால்வாயில் கொட்டப்பட்டதாக வைரல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் தினசரி பாதிப்புகள் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மயானங்கள் விடாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தினை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் அம்மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், “இந்திய நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பெருமளவிலான ரெம்டிசிவர் மருந்தை பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டி இருக்கிறார்கள். இந்தியனே விழிப்பாய் இரு” என்கிற அடைமொழியுடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
ரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்ட என்று பரவும் வீடியோ தகவல் குறித்து உண்மையறிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட அந்த வைரல் வீடியோவை எடுக்கும் நபர், தண்ணீரில் மிதக்கும் ஒரு ரெம்டிசிவர் குப்பியை எடுத்துக் காண்பிக்கிறார். அதில் ‘கோவிஃபார்’ என்று எழுதப்பட்டுள்ளது.
Covifor என்கிற கீவேர்டினைப் பயன்படுத்தி தேடியதில் கடந்த மே 6 ஆம் தேதியன்று தி ட்ரிப்யூன் செய்தித்தளத்தில் பஞ்சாப்பின் சாலம்பூர் கிராமம் அருகே அமைந்துள்ள பக்ரா கால்வாயில் மருந்துக்குப்பிகள் எக்கச்சக்கமாக மிதந்தாகவும், அங்கு சென்று ஆய்வு செய்த காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து போலியான மருந்துக்குப்பிகளை பறிமுதல் செய்தனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துக்கட்டுப்பாடு துறை அதிகாரியான தேஜிந்தர் சிங், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் போலியானவை என்று தெரிவித்துள்ளார்
அம்மருந்தை தயாரிக்கும் ஹெட்டெரோ நிறுவன உண்மைத்தயாரிப்பு மருந்துக்குப்பியில் இருந்து கால்வாயில் கிடைத்த மருந்துக்குப்பி முழுவதுமாக வேறுபட்டுள்ளது.
தொடர்ந்து, முன்னதாக ஏப்ரல் 26 ஆம் தேதியன்று டெல்லியைச் சேர்ந்த டிஜிபியான மோனிகா பரத்வாஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “போலியான remdesiver குப்பிகளுக்கும், உண்மையான மருந்திற்கும் இடையே இத்தனை வித்தியாசங்கள் உள்ளன” என்று தெளிவுபடுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில் போலியான மருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ள குப்பிகளே பஞ்சாப் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா டுடே போலியான மருந்தினைக் கண்டறிவது எப்படி என்கிற கட்டுரை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் கால்வாயில் கிடைத்த அட்டை கொண்ட மருந்துக்குப்பிகள் போலி என்பது தெரிய வருகிறது.
Conclusion:
ரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்ட என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Monika Bhardwaj: https://twitter.com/manabhardwaj/status/1386578612707643393?s=20
The Tribune: https://www.tribuneindia.com/news/punjab/621-fake-remdesivir-vials-found-in-bhakra-249186
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)