Fact Check
காந்தி சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடினாரா?
Claim
காந்தி சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடினார்.
Fact
இத்தகவல் தவறானதாகும். ராகுல் காந்தி அவரது தந்தையான ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் அவரது சமாதிக்கு சென்று பூ தூவி வணங்கினார். சமாதியை விட்டு செல்லும்போது தந்தை நினைவாக அப்பூக்களில் சிலவற்றை தனது பேண்ட் பாக்கெட்டில் எடுத்து சென்றார். இந்த நிகழ்வே தவறாக திரித்து பரப்பப்படுகின்றது.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை திருடியதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
Fact Check/Verification
காந்தி சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடியதாக பரப்பப்படும் வீடியோ குறித்து தேடியதில், இந்திய இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எகஸ் பக்கத்தில் ‘पिता की याद में उठाया गया एक फूल, बहुत कुछ कह गया…’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது, “தந்தையின் நினைவாக எடுக்கப்பட்ட மலர்… பலவற்றை கூறுகின்றது” என்று குறிப்பிட்டு அவ்வீடியோ பகிரப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் உத்தரகாண்ட் காங்கிரஸின் எக்ஸ் பக்கத்திலும் இவ்வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ராகுல் காந்தி மலர் எடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் அவரது சமாதியிலிருந்து ராகுல் காந்தி பூ எடுத்தாக கூறி ஜீ பீகார் ஜார்க்கண்ட் ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ANI ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ராஜீவ் காந்தியின் 33 ஆவது நினைவு தினத்தில் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜூனாவும் ராகுல் காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தியதாக வீடியோ ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவில் மல்லிகார்ஜூனாவும் ராகுல் காந்தியும் ராஜீவ் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு, சமாதியை சுற்றி வந்தனர். சமாதியை சுற்றும்போது ராகுல் சமாதியிலிருந்த பூ ஒன்றை எடுத்து அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சென்றார்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில்,
ராகுல் காந்தி எடுத்தது நாணயம் அல்ல; அது பூவாகும்.
அதேபோல் ராகுல் காந்தி அவரது தந்தையான ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்தே பூ எடுத்துள்ளார்; மகாத்மா காந்தியின் சமாதியிலிருந்து அல்ல.
Also Read: இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
காந்தி சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
ராகுல் காந்தி அவரது தந்தையான ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் அவரது சமாதிக்கு சென்று பூ தூவி வணங்கினார். சமாதியை விட்டு செல்லும்போது தந்தை நினைவாகவாக அப்பூக்களில் சிலவற்றை தனது பேண்ட் பாக்கெட்டில் எடுத்து சென்றார். இந்த நிகழ்வே தவறாக திரித்து பரப்பப்படுகின்றது
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post from Indian Youth Congress, dated May 21, 2025
X post from Uttarakhand Congress, dated May 21, 2025
Report by Zee Bihar Jharkhand, dated May 21, 2025
Report by ANI, dated May 21, 2025