இஸ்லாமியர்கள் சிலர், ‘ஆளோடு வந்தாலும் வேலோடு வந்தாலும் எங்கட்ட அடங்கி தான் போகனும். வீர துலுக்கன் டா’ என்று புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact check/Verification:
இந்தியா பல்வேறு இன, மொழி, மத வேறுபாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு.
எத்தனைப் பிரிவினைகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற சகோதரத்துவமானவர்களை கொண்ட ஒரு தேசம்.
ஆனாலும், அரசியல் செய்யும் ரீதியிலான காரணங்களுக்காக இனக்குழுக்கள் மீதான துவேச கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பரப்பப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், இஸ்லாமியர்கள் சிலர் கைகளில் கம்பு, இடுப்பில் கத்தியுடன் நின்று ‘ஆளோடு வந்தாலும் வேலோடு வந்தாலும் எங்கட்ட அடங்கி தான் போகனும். வீர துலுக்கன் டா’ என்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
இஸ்லாமியர்கள் இவ்வாறு பதிவிட்டதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
ஆனால், அதில் சரியான தெளிவுகள் கிடைக்காத நிலையில் தொடர்ந்து குறிப்பிட்ட அப்பதிவின் கீழ் இருந்த பதிவுகள் அடிப்படையில் சில முக்கிய சொற்பதங்களால் தேடுதலில் ஈடுபட்டோம்.
அத்தேடலின் முடிவில், கேரள எஸ்.டி.பி.ஐ கட்சியின் சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு, ஜனவரி 22 ஆம் தேதியன்று பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது.
அந்த வீடியோவின் தலைப்பை தமிழ்ப் படுத்தி பார்த்தபோது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிர்த்தியாகம் செய்த வாரியன் குன்னத்து குன்ஜாகமத் ஹாஜி, அலி முஸ்லியார், மற்றும் மாப்பிள்ளைமார் என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் உடையணிந்தவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் என்பது நமக்குத் தெரிய வந்தது. ‘ராஜ்பவனை நோக்கி ஊர்வலம்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் குறிப்பிட்ட அந்த ஊர்வலத்தில், மாப்பிள்ளைமார் சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்ற உடையணிந்து, புகைப்படத்தில் இருக்கும் உடையுடன் ஊர்வலமாக வருவதும் நம்மால் காண முடிந்தது.
https://www.facebook.com/sdpimalappuramdistrict/videos/1798430110290005

கேரளாவில் கடந்த ஆண்டு பரவலாக நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ சார்பான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஊர்வலங்களில் இதுவும் ஒன்று. 1921 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு, உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் பொருட்டு அவர்கள் இவ்வாறு உடை உடுத்தியிருப்பதையும் எஸ்.டி.பி.ஐ மலப்புரம் உறுப்பினர்கள் சிலர் மூலமாக நாம் தெரிந்து கொண்டோம்.
Conclusion:
இஸ்லாமியர்கள், மதம் சார்ந்த பிரச்சினைகளைத் தூண்டும் வகையில் கத்தி, கம்புடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
உண்மையில், அப்புகைப்படம் மலப்புரத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சி ஊர்வலத்தில் மாப்பிள்ளைமார் சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்று உடையணிந்து வந்தவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
Result: Misleading
Our Sources:
SDPI: https://www.facebook.com/sdpimalappuramdistrict/videos/1798430110290005
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)