Claim: இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி தர்ஹா
Fact: பொட்டல்புதூர் தர்ஹா உண்மையில் இந்து கட்டிடக்கலை பாணியை பின்பற்றி கட்டப்பட்டதாகும்.
இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி பொட்டல்புதூர் மசூதி என்று வீடியோ தகவல் ஒன்று பரவுகிறது.
”எந்த தெய்வம் குடியிருந்த கோவிலோ இடம் தென்காசி” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?
Fact Check/Verification
இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி பொட்டல்புதூர் மசூதி என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ குறித்து கீ-வேர்டுகள் மூலமாக தேடியபோது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவின் மூலமாக ”இந்த வீடியோ போலியானது; குறிப்பிட்ட முகைதீன் ஆண்டவர் தர்ஹா, இந்து கோயில்களின் கட்டிடக்கலையை உதாரணமாக எடுத்துக் கொண்டு திராவிட கட்டக்கலை பாணியில் கட்டப்பட்ட பழமையான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம்” என்று விளக்கமளிக்கப்பட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.
இதுகுறித்து தொடர்ந்து நாம் தேடியபோது, மசூதி நிர்வாகம் தொடர்பான வழக்கொன்றில் பொட்டல்புதூர் மசூதி இந்து கோயில்களின் கட்டிடக்கலையை உதாரணமாகக் கொண்டு அனைத்து மதத்தினரின் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் கடந்த 1674ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், இங்கே நடைபெறும் வருடாந்திர கந்தூரி பெருவிழாவில் மதச்சார்பின்றி இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தர்ஹா நிர்வாகம் தரப்பில் மேற்கோள் ஒன்று காட்டப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாம் கண்டறிந்த இந்த தரவானது, கடந்த 1916-1917 ஆண்டுகளில் அப்போதைய காலகட்டத்தில் தூத்துக்குடி கலெக்டராக பதவி வகித்த H.R. Pate புதிதாக இணைத்து எழுதிய தகவல்களுடன் வெளியிடப்பட்ட ” Madras District Gazetteer” இல் இடம்பெற்றுள்ள ’தின்னவேலி (இன்றைய திருநெல்வேலி என்கிற நெல்லை மாவட்டம்) – Volume 1′ல் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ”இந்து கோயில்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியின் வடிவமைப்பு மத ஒற்றுமைக்கான எடுத்துக்காட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு நடைபெறும் கந்தூரி விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இன்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொள்கின்றனர். சுமார் 1674ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக கூறப்படும் பழமையான இந்த தர்ஹாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என்று அனைத்து மதத்தினரும் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பே, இந்து கோயில்களின் பாணியை முன்னிறுத்தி அக்கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட கீழக்கரை மசூதி பற்றி நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மசூதிகளும் இந்து – இஸ்லாமிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்து கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?
Conclusion
இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி பொட்டல்புதூர் மசூதி என்று பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
IndianKanoon
X Post From, @tn_factcheck, Dated May 03, 2024
Madras District Gazetteers Tinnevelly Volume I, Written By H.R.Pate
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)