Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குருவாயூர் கோவிலிலிருந்து யானை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இத்தகவல் தவறானது என குருவாயூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குருவாயூர் கோவிலிலிருந்து குட்டி யானை நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், அந்த யானை பாடலுக்கு நடனம் ஆடுவதாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாரா அண்ணாமலை?
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குருவாயூர் கோவிலிலிருந்து யானை நன்கொடையாக வழங்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் திருச்செந்தூர் கோவிலுக்கு குருவாயூர் கோவிலிலிருந்து யானை வழங்கப்பட்டதாக எந்த ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
ஆகவே இதனையடுத்து குருவாயூர் தேவசம் போர்டின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம்.
அவர்கள், “திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குருவாயூர் கோவிலிலிருந்து யானை வழங்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது, வைரலாகும் வீடியோவில் காணப்படும் யானை குருவாயூர் கோவிலை சார்ந்த அல்ல” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், குருவாயூர் கோவிலிலிருந்து யானைகளை நன்கொடையாக வழங்கப்படும் வழக்கமே இல்லை என்றும், மற்றவர்கள் தரும் யானையை பெறும் வழக்கம் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தனர். மற்றவர்களிடமிருந்து யானையை பெறும் இவ்வழக்கத்திற்கு ‘நடக்கிருதல்’ என பெயர் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் வாய்ஸ் ஆஃப் திருச்சூர் (Voice of Thrissur ) எனும் வாட்டர் மார்க் இருந்ததை தொடர்ந்து, இதை அடிப்படையாக வைத்து அடுத்து தேடினோம்.
அத்தேடலில் வாய்ஸ் ஆஃப் திருச்சூர் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 08, 2024 அன்று வைரலாகும் இதே வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஆகவே இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மினை தொடர்புக் கொண்டு இவ்வீடியோ குறித்து பேசினோம். அவர்கள் “இவ்வீடியோவை இணையத்திலிருந்து பெற்றதாகவும், இவ்வீடியோவுக்கும் குருவாயூர் கோவிலுக்கும் தொடர்பில்லை என்றும்” தெரிவித்தனர்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் திருச்செந்தூர் கோவிலுக்கு யானை நன்கொடையாக வழங்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பதும், இணையத்தில் பகிரப்பட்ட யாதோ ஒரு வீடியோவை இந்த பொய் தகவல் பரப்பப்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.
Also Read: விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று எச்சரித்தாரா பேராசிரியர் ஜவாஹிருல்லா?
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குருவாயூர் கோவிலிலிருந்து யானை நன்கொடையாக வழங்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இத்தகவல் தவறானது என குருவாயூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது. மேலும் குருவாயூர் கோவிலில் யானையை நன்கொடையாக கொடுக்கும் வழக்கமே இல்லை என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இந்த கட்டுரையானது சப்லூ தாமஸ் அவர்களின் உதவியுடன் எழுதப்பட்டுள்ளது)
Sources
Telephone conversation with Guruvayur Dewaswom Board PR office
Facebook Post by Voice of Thrissur on August 8,2024