“பணத்திற்கு முன் சட்டமே அடிமை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் காரில் வரும் நபர் ஒருவரின் காலில் போலீசார் விழுவதையும், போலீசாருக்கு அந்நபர் பணம் கொடுப்பதையும் காண முடிந்தது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக பரப்பப்படுகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
தமிழ்நாட்டு போலீசார் காரில் வந்தவரிடம் காலில் விழுந்து லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி படங்களாகப் பிரித்து, அப்படங்களை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் ‘toxic_memes_official_007’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் காரில் வந்த நபரும் போலீசாரும் கன்னடத்தில் பேசுவதை கேட்க முடிந்தது.

இதனை அடிப்படையாக வைத்து அடுத்து தேடியதில் இச்சம்பவம் குறித்து தினமலரில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
காரில் வந்தவர் பதாமி சித்தனகோலா மடத்தின் மடாதிபதி சிவக்குமார சுவாமிகள் என்றும், அவரிடம் பாகல்கோட் மாவட்டத்திற்குட்பட்ட பதாமி காவல்நிலையத்தை சார்ந்த போலீசார் ஆசிப்பெற்று, பணம் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆறு போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் ஏசியாநெட் சுவர்ண நியூஸ், தி இந்து, ஈடிவி பாரத் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதுக்குறித்த செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அந்த ஊடகங்களிலும் இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: மதுபானக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் என்று பரவும் செய்தி உண்மையா?
Conclusion
தமிழ்நாட்டு போலீசார் காரில் வந்தவரிடம் காலில் விழுந்து லஞ்சம் வாங்கியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்ததாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post from the user, toxic_memes_official_007, Dated March 14, 2025
Report by Dinamalar, Dated March 19, 2025
Report by Asianet Suvarna News, Dated March 15, 2025
Report by The Hindu, Dated March 14, 2025
Report by ETV Bharat, Dated March 15, 2025