மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

2022-2023 நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளியன்று ( மார்ச் 18) வெளியிடப்பட்ட நிலையில், மோடி அரசின் ஜல் ஜீவன் திட்டம், சுகன்யா திட்டம், அபியான் போஷன் திட்டம் ஆவாஸ் யோஜனா திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழில் பெயர் சூட்டும் விழா மட்டுமே இன்று நடைப்பெற்றுள்ளது. வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது என்று வைகோ கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக வைகோ இவ்வாறு பேசியுள்ளாரா என்பதை உறுதி செய்ய இதுகுறித்து தேடினோம். இதில் தமிழக பட்ஜெட் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உள்ளது என்று வைகோ கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது.
மேலும் தேடுகையில், மதிமுக தலைமை கழக செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ அவர்களும் இதே கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கும்போது வைகோ தமிழக பட்ஜெட்டை விமர்சித்தாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், உண்மையிலேயே அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில், ”தமிழ் வளர்ச்சிக்கு முதன்மையான இடம் அளித்து, அகர முதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு குறித்த அறிவிப்பு செந்தேனாய் இனிக்கிறது”என்று வைகோ கூறியதாக தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் அணியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று அவர்கள் விளக்கமளித்தனர்.
இதனைடிப்படையில் பார்க்கும்போது வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை தெளிவாக உணர முடிகின்றது.
Also Read: கனிமொழி திமுகவிலிருந்து விலகுகின்றாரா?
Conclusion
மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என நம் ஆய்வில் கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Newschecker Conversations
Daily Thanthi Article
Durai VaikoTweet
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)