Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் சோகக் கதை என்று பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்ட ஆட்சியர் ராணி சோயாமோயின் உண்மைக் கதை என ஒரு பதிவு கடந்த சில நாட்களாக மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
அந்த பதிவு இதுதான்,
கேரளா மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய்,கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை
பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார், ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன. அப்போது குழந்தைகள் கலெக்டரிடம் சில கேள்விகளை கேட்டனர்.
கே: உங்கள் பெயர் என்ன?
என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்.
வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?
ஒரு மெல்லிய பெண் பார்வையாளர்களிடமிருந்து எழுந்து நின்றாள்.
கேள், குழந்தை…
மேடம், ஏன் முகத்துக்கு மேக்கப் போடக்கூடாது?”
கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. மெல்லிய நெற்றியில் வியர்வை வழிந்தது. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள். மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார். பிறகு குழந்தையை உட்காருமாறு சைகை செய்தார். பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார்.
குழந்தை குழப்பமான கேள்வியைக் கேட்டது. இது ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத ஒன்று. அதற்குப் பதில் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல வேண்டும். என்னுடைய கதைக்காக உங்கள் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்க நீங்கள் தயாராக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
தயார்.
நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் பிறந்தேன். கலெக்டர் சற்று நிதானித்து பார்வையாளர்களை பார்த்தார். “மைக்கா” சுரங்கங்கள் நிறைந்த கோடெர்மா மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தேன். என் அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள். எனக்கு மேலே இரண்டு சகோதரர்களும் கீழே ஒரு சகோதரியும் இருந்தனர். மழை பெய்தால் கசியும் ஒரு சிறிய குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம்.
வேறு வேலை கிடைக்காததால் எனது பெற்றோர் சொற்ப கூலிக்கு சுரங்கத்தில் வேலை செய்தனர். அது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது.
எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாக இருந்தனர். சுரங்கங்களில் உள்ள கொடிய மைக்கா தூசியை சுவாசிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் சகோதரர்கள் நோயால் இறந்துவிட்டனர்.
ஒரு சிறு பெருமூச்சுடன் கலெக்டர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்தார்.
பெரும்பாலான நாட்களில் எங்கள் உணவில் தண்ணீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகள் தான். எனது சகோதரர்கள் இருவரும் கடுமையான நோய் மற்றும் பட்டினியால் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டனர். என் கிராமத்தில் பள்ளிக்கூடம் என்று ஒன்று இல்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை அல்லது கழிவறை கூட இல்லாத கிராமத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மின்சாரம் இல்லாவிட்டாலும்?
ஒரு நாள் நான் பசியுடன் இருந்தபோது, என் தந்தை என்னை, இரும்புத் தாள்களால் மூடப்பட்ட ஒரு பெரிய சுரங்கத்திற்கு இழுத்துச் சென்றார். அது புகழ்பெற்ற மைக்கா சுரங்கம். இது ஒரு பழங்கால சுரங்கம். கீழே உள்ள சிறிய குகைகள் வழியாக ஊர்ந்து சென்று மைக்கா தாதுக்களை சேகரிப்பது எனது வேலை. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. என் வாழ்நாளில் முதல்முறையாக ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பினேன். ஆனால் அன்று நான் வாந்தி எடுத்தேன்.
நான் ஒன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் நான் விஷ தூசியை சுவாசிக்கக்கூடிய இருட்டு அறைகளில் மைக்காவை முகர்ந்து கொண்டிருந்தேன்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு ரொட்டியாவது கிடைக்கும். பசி மற்றும் பட்டினியால் நான் ஒவ்வொரு நாளும் மெலிந்து நீரிழப்புடன் இருந்தேன். ஒரு வருடம் கழித்து என் சகோதரியும் சுரங்கத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் நல்லா வந்தவுடனே அப்பா, அம்மா, அக்கா மூவரும் சேர்ந்து உழைத்து பசியில்லாமல் வாழலாம் என்ற நிலைக்கு வந்தோம்.
ஆனால் விதி வேறொரு வடிவில் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஒரு நாள் கடும் காய்ச்சலால் வேலைக்குப் போகாமல் இருந்தபோது திடீரென மழை பெய்தது. சுரங்கத்தின் அடிவாரத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி.
அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது . பார்வையாளர்கள் அனைவரும் மூச்சு விடக்கூட மறந்தனர். பலரது கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.
எனக்கு ஆறு வயதுதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதியில் அரசு அகத்தி மந்திர் வந்தடைந்தேன். அங்கு நான் படித்தேன். என் கிராமத்தில் இருந்து முதலில் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டவள் நான். இறுதியாக இதோ உங்கள் முன் மாவட்ட ஆட்சியர்..
இதற்கும் நான் மேக்கப் பயன்படுத்தாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.
பார்வையாளர்களை பார்த்துக்கொண்டே அவர் தொடர்ந்தாள்.
அந்த நாட்களில் இருளில் ஊர்ந்து நான் சேகரித்த மைக்கா முழுவதையும் ஒப்பனை பொருட்களில் பயன்படுத்துவதை அப்போதுதான் உணர்ந்தேன். மைக்கா என்பது ஃப்ளோரசன்ட் சிலிக்கேட் கனிமத்தின் முதல் வகை.
பல பெரிய அழகுசாதன நிறுவனங்கள் வழங்கும் மினரல் மேக்கப்களில், 20,000 இளம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் பல வண்ண மைக்காக்கள் மிகவும் வண்ணமயமானவை. ரோஜாவின் மென்மை உங்கள் கன்னங்களில் பரவுகிறது, அவற்றின் எரிந்த கனவுகள், அவர்களின் சிதைந்த வாழ்க்கை மற்றும் பாறைகளுக்கு இடையில் நசுக்கப்பட்ட அவர்களின் சதை மற்றும் இரத்தம்.
மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மைக்கா இன்னும் சுரங்கங்களில் இருந்து குழந்தை கைகளால் எடுக்கப்படுகிறது. நம் அழகை அதிகரிக்க.
இப்போது நீங்கள் சொல்லுங்கள்.
நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது?
பட்டினியால் இறந்த என் சகோதரர்களின் நினைவாக நான் எப்படி வயிறு நிரம்ப சாப்பிட முடியும்?
எப்பொழுதும் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும் என் அம்மாவின் நினைவாக நான் எப்படி விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிவது?
வாய் திறக்காமல் தலையை உயர்த்தி, சிறு புன்னகையுடன் அவள் வெளியே சென்றபோது பார்வையாளர்கள் அனைவரும் அறியாமல் எழுந்து நின்றனர். அவர்கள் முகத்தில் இருந்த மேக்கப் அவர்கள் கண்களில் இருந்து வழியும் சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது.
ஃபேஸ் பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் நிறைந்த பெண்களைப் பார்த்து சிலர் வெறுப்படைந்தால் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதிக தரமான மைக்கா இன்றும் ஜார்க்கண்டில் வெட்டப்படுகிறது. 20,000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்கின்றனர். சிலர் நிலச்சரிவாலும், சிலர் நோயாலும் புதையுண்டுள்ளனர்.
இந்த பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் சோகக் கதை வைரலாகும் பதிவின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக மலப்புரம் ஆட்சியராக யார் உள்ளார் என்பதனை தேடினோம். இதில் V.R.பிரேம்குமார் என்பவர் தற்சமயம் மலப்புரத்தில் ஆட்சியராக உள்ளார் என அறிய முடிந்ததது. மலப்புரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் இத்தகவல் அறியப்பட்டது.
இதனையடுத்து ராணி சோயாமோய் எனும் பெயரில் கேரளாவில் ஆட்சியர் யாரேனும் பணிபுரிகின்றாரா என தேடினோம். இத்தேடலில் இப்பெயரில் எந்த ஒரு IAS அதிகாரியும் தற்சமயம் கேரளாவில் பணிபுரியவில்லை என்பதை அறிய முடிந்தது.
இதனையடுத்து வைரலாகும் பதிவுடன் ராணி சோமோய் என்று பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்புகைப்படத்தில் இருப்பவர் குறித்து அய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் பதிவில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் பெயர் ராணி சோயாமோய் அல்ல, ஷினா மோல் என அறிய முடிந்தது. இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவார். தற்சமயம் இவர் இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி பிரிவின் ஆணையராக பணிபுரிந்து வருகின்றார்.
இவர் கடந்த காலங்களில் கேரளாவில் மலப்புரம் ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.
ஷினா மோல் கேரளாவைச் சேர்ந்த அபு மாஷ், சுலேகா தம்பதிகளின் மகளாவார். இவருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர்கள் இருவருமே சிவில் சர்வீஸ் அதிகாரிகளாகவே பணிபுரிந்து வருகின்றனர். சகோதரி ஷைலா ஐஏஎஸ் அதிகாரியாகவும், அக்பர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனையடுத்து வைரலாகும் கதை குறித்து தேடுகையில் அது மலையாளத்தில் வந்த சிறுகதை என அறிய முடிந்தது. ஹக்கீம் மொரயூர் எனும் மலையாள எழுத்தாளர் ‘மூன்று பெண்கள்’ எனும் தலைப்பில் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஹக்கீம் மொரயூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுக்குறித்து விளக்கி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில்,கற்பனையாக எழுதப்பட்டு சிறுகதையை உண்மையாக இருக்கும் ஒரு மனிதரோடு தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பப்படுகின்றது என அறிய முடிகின்றது.
Also Read: கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் என்று அறிவித்தாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?
மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் சோகக் கதை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கதை உண்மையில் நடந்தததல்ல, அது கற்பனையாக எழுதப்பட்ட சிறுகதை என உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
IAS officers Gradation list, Kerala
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)