“மாட்டு மூத்திரத்தில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அமெரிக்காகாரன் அதற்கு காப்புரிமை பெற்றுவிட்டான்” என்கிற ரீதியிலான புகைப்படம் ஒன்று குறித்த உண்மையறியும் சோதனை நம்மிடம் வந்திருந்தது.

Fact check/Verification:
“இந்தியர்கள் பலரும் மாட்டு மூத்திரம் (அ) கோமியத்தின் பலன்கள் பற்றி அறியாமல் பசு மூத்திரம் குடிப்பவர்கள் என்று கேலி பேச வைத்துவிட்ட அமெரிக்கா.
ஆனால், கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கேன்சர், ஆன்ட்டி பயாடிக், ஆன்ட்டி இன்பெக்ஷன் உள்ளிட்ட உடல்நலக்குறைபாடுகளுக்கு எதிரான மருந்துகளுக்கு யாரும் அறியாமல் காப்புரிமை பெற்று விட்டது” என்று கூறிச் சில காப்புரிமை ஆவணங்களுடன் ஒரு புகைப்படம் ஒன்று நம்முடைய உண்மையறியும் சோதனைக்காக வாட்ஸ்அப் மூலமாக வந்தது.

இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இச்செய்தி மற்றும் காப்புரிமை ஆவணங்கள் பற்றி நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
கோமியத்தில் இருந்து பல்வேறு வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட்டதாக பரவிய இந்த குறிப்பிட்ட புகைப்படச் செய்தி குறித்து ஆராய முதலில் இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது எப்போது என்று பார்த்தோம்.
கடந்த 2019ம் ஆண்டே, இந்த பதிவானது பலராலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், இந்த குறிப்பிட்ட தகவலை செய்தியாக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றும் வெளியிட்டிருந்தது நமக்குத் தெரிய வந்தது. அச்செய்தியில், பசுவின் சிறுநீரில் இருந்து பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றினை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதற்கு அமெரிக்கா காப்புரிமை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இச்செய்தி குறித்து, கடந்த 2019ம் ஆண்டே ஒரு குறிப்பிட்ட இணைய உண்மையறியும் தளம் ஆய்வு மேற்கொண்டுள்ளதும் நமக்குத் தெரிய வந்தது. அதன்படி, மாட்டின் சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றில் இருந்து மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ள மட்டுமே இந்திய ஆய்வாளர்கள் அமெரிக்க காப்புரிமை பெற்றுள்ளனர்.
ஆனால், அமெரிக்காவில் யாரும் கோமியத்தில் இருந்து கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமை பெறவில்லை என்பதற்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் குறிப்பிட்ட அத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்களின் அடிப்படையில், பசு மாட்டின் சிறுநீரில் இருந்து இதுவரை கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்பதும், கோமியத்திலிருந்து கிடைக்கும் மருந்துகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் காப்புரிமை பெறவும் இல்லை என்பதையும் ஆதாரத்துடன் தெரிய வருகிறது.


இதுகுறித்த ஆய்வொன்றினை ஆங்கில இணையதளம் ஒன்றும் முன்னெடுத்துள்ளது நமக்குத் தெரிய வந்துள்ளது.
Conclusion:
மாட்டு மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது என்று வெளியாகிய செய்தியானது தவறானது; பழைய செய்தி என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.
ஆகவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading/Partly False
Our sources:
News websites: https://tamil.factcrescendo.com/factcheck-us-get-patents-for-medicines-made-from-cow-urine/
https://in.news.yahoo.com/fit-webqoof-us-patents-medicines-113018700.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)