மு.க.ஸ்டாலின், திமுக தலைவரான இவர் குடும்பத்துடன் தேர்தலுக்கு பிந்தைய ஓய்வுக்காக கொடைக்கானல் சென்ற நிலையில், அங்கே புகைப்படம் எடுத்தபோது அவருடைய பின்புறம் சுவரில் நாம் தமிழர் கட்சி விளம்பரம் இடம் பெற்றிருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில், வருகின்ற மே 2 ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இச்சூழ்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் தேர்தலுக்குப் பிந்தைய ஓய்விற்காக கொடைக்கானல் சென்றிருந்தார். அங்கு, பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
தொடர்ந்து, மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கொடைக்கானலில் ஓய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழாமல் இல்லை.
இந்நிலையில், அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்ட ஸ்டாலினின் பின்புறம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பெயர் கொண்ட தேர்தல் விளம்பரம் சுவரில் இடம்பெற்றுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலக்கும் புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification:
சமூக வலைத்தளங்களிலேயே இப்புகைப்படத்தைப் பகிர்ந்தவர்கள் எடிட்டர் யாருப்பா என்றெல்லாம் கமெண்ட் பதிவிட்டிருந்த போதும், பலரும் இதை உண்மை என்று நம்பி ஷேர் செய்திருந்தனர்.
தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் விசிட் குறித்த செய்திகளை ஆராய்ந்தோம். அப்போது, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் மன்னவனூரில் உள்ள மத்திய அரசின் செம்மறி ஆடுகள் மற்றும் முயல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டுள்ளனர்.
அப்போது, அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்ட மு.க.ஸ்டாலினின் பின்புற சுவரில் சீமான் குறித்த விளம்பரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும், அது மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என்பதால், தேர்தல் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கவும் வாய்ப்பில்லை. மேலும், அங்கு எடுக்கப்பட்ட மற்ற புகைப்படங்களில் அந்த சுவர் பகுதி இடம்பெற்றுள்ளது. அது காலியாகவே காட்சியளிக்கிறது.

தமிழின் முன்னணி செய்தி நிறுவனங்கள் இங்கே, இங்கே இதுகுறித்த செய்திகளை விரிவாக வெளியிட்டுள்ளன. எனவே, குறிப்பிட்ட அப்புகைப்படத்தின் பின்பகுதி எடிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
Conclusion:
மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பின்புறம் நாம் தமிழர் கட்சியின் விளம்பரம் இடம்பெற்றிருந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Tamil Hindu:https://www.hindutamil.in/news/breaking-news/660967-kodaikanal-stalin-spends-quality-time-with-family-2.html
Samayam Tamil:https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-visit-sheep-farm-in-kodaikanal/articleshow/82148101.cms
News 18 Tamil: https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-visits-kodaikanal-hill-villages-with-his-family-ekr-450013.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)