பாகிஸ்தான் தடகள வீரரான அர்ஷத் நதீம், டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் ஈட்டித்தந்த நீரஜ் சோப்ராவை, தனது ட்விட்டர் பக்கத்தில் மனமாரப் பாரட்டியதாக செய்தி ஒன்று புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கு தங்கத்தைப் பெற்றுத் தந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெற்ற தங்கப்பதக்கம் இது மட்டுமே. தடகளத்தின் ஈட்டி எறிதல் பிரிவில் தனிநபராக இந்த தங்கப்பதக்க சாதனையைச் செய்துள்ளார் நீரஜ் சோப்ரா.
இந்நிலையில், தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு, பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததாகப் பரவும் செய்தி குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட அந்த செய்தியில் ஷேர் செய்யப்படும் @ArshadNadeemPak என்கிற ட்விட்டர் பக்கத்தில் வைரலாகிய ட்விட் எடிட் செய்யப்பட்டு இருந்தது. மேலும், அந்த ட்விட்டர் பக்கம் மே மாதம், 2021 அன்றுதான் துவங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, @ArshadNofficial என்கிற மற்றொரு ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் ட்விட், வார்த்தை மாறாமல் அப்படியே இடம்பெற்றுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட இந்த இரண்டு ட்விட்டர் ஐடிகளுமே ஆய்வின் முடிவில் போலியானவை என்பது தெரிய வந்தது.
உண்மையில் அர்ஷத் நதீம் @Arshadnadeem76 என்கிற ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவுகள் இட்டு வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளரான அப்துல் ஹஃப்பார் என்பவர் அர்ஷத்நதீம்76 என்பது தவிர அர்ஷத்துக்கு வேறெந்த ட்விட்டர் பக்கங்களும் இல்லை என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அர்ஷத் நதீமும் இதுகுறித்த விளக்கத்தை ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கீழே இணைக்கப்பட்டிருக்கும் ட்விட்டே, அவரால் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இன்று புதிதாக இடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட் ஆகும்.
அர்ஷத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் ஒலிம்பிக் அகாடமி அவரைப் பாராட்டி ட்விட் வெளியிட்டுள்ளது.
Conclusion:
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததாகப் பரவும் செய்தி தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
Twitter: https://twitter.com/NOCPakistan/status/1423985395893784577?s=20
Twitter: https://twitter.com/Arshadnadeem76
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)