நான் நிதியமைச்சராக இருக்கும் வரை பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விட மாட்டேன் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று (17/09/2021) லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி குறித்து விவாதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால், எரிபொருட்களின் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெட்ரோல் டீசல், விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர தற்போது வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயமானது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் இன்றைய ஆளுங்கட்சியான திமுகவினர் முக்கியமானவராவர்.
அதற்கான வாய்ப்பு கை கூடி வரும்போது திமுகவினரே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மக்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “பெட்ரோல் விலையை கொண்டு வருவது நான் நிதி அமைச்சராக இருக்கும் வரை நடக்காது. தமிழக அரசின் வருவாயே எனக்கு முக்கியம். தேர்தல் வரும்போது இதைப் பற்றி சிந்திக்கலாம். இப்போது வருவாயே இலக்கு.” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
நான் நிதியமைச்சராக இருக்கும் வரை பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விட மாட்டேன் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நேற்று தீனதயாய் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியின் 250 சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கு தமிழகம் சம்மதம் தர தயார் என்று தெரிவித்தார்.
இவ்விஷயமானது நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது.
இதில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். அவரும்,
“வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை”
என்று நமக்கு விளக்கமளித்தார்.
Also Read: 30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற மோடி படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டாரா அண்ணாமலை?
Conclusion
நான் நிதியமைச்சராக இருக்கும் வரை பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விட மாட்டேன் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)