மத்தியில் ஆளும் பாஜக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணமலை விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்கள் கடந்த வருடத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைந்த இவருக்கு தொடக்கத்திலேயே தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இதன்பின் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பொறுப்பு கிடைத்தவுடன் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலக்கப்பட்டு அண்ணாமலை அவர்களுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது. அண்ணாமலை கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு அளித்த சூட்டோடு சூடாக மீடியாக்களை ஆறு மாதங்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று பேசினார். இந்த விஷயமானது ஊடகங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்பின் நான் ஊடகங்களை கூறவில்லை, சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுபவர்கள் குறித்தே பேசினேன் என்று விளக்கமளித்தார்.
இதன்பின் இந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மீண்டும் மத்திய அரசை அண்ணாமலை விமர்சித்ததாக கூறி சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. மத்திய அரசை அண்ணாமலை விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் நியூஸ்கார்டில், “ஏழு வருடங்கள் பாஜக ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மத்தியில் ஆளும் பாஜக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய வைரலாகும் நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. அண்ணாமலை அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இச்சந்தின்போது “75 நாட்கள் திமுக ஆட்சியைக் கண்டு மக்கள் வெறுப்டைந்துள்ளனர்” என்கிற கருத்தைக் கூறினார்.
இந்த விஷயமானது ஊடகங்களில் செய்தியாக வந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம். அப்டேட் நியூஸ் 360 எனும் இணையத்தள ஊடகத்திலும் இந்த செய்தி வந்துள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள நியூஸ்கார்டை எடிட் செய்தே அண்ணாமலை மத்திய அரசை விமர்சித்ததாக பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
மத்தியில் ஆளும் பாஜக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணமலை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Kathir News: https://kathir.news/politics/75–1111022
Update News 360: https://www.facebook.com/updatenewsoffl/photos/4342092805852792
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)