ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் கூட்டம் ஒன்றில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா தொடங்கியதிலிருந்து அவர் குறித்து பல செய்திகளை எதிர்கட்சியினர் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக பாஜவின் சமூக ஊடக மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், “ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற #pappu ‘மைக்’கை ஆன் பண்ணாமலும் பேசமுடியும்” என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி உரையற்றுகின்றார். ஆனால் அவரின் உரையை நம்மால் கேட்க முடியவில்லை. மாறாக மக்களின் இரைச்சலையும், கைத்தட்டல் சத்தத்தையுமே கேட்க முடிகின்றது.

தொடர்ந்து தேடியதில் பலரும் இதே வீடியோவை பகிர்ந்து, ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் பேசியதாக பரப்பி வருவதை காண முடிகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் கூட்டம் ஒன்றில் பேசியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இணையத்தில் இச்செய்தி குறித்து தேடுகையில் நவம்பர் 10, 2022 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றை நம்மால் காண முடிந்தது. இச்செய்தியில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பேசும்போது நடக்கும் நிகழ்வை விளக்குவதற்காக ராகுல் காந்தி இருமுறை மைக்கை ஆஃப் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடந்து தேடியதில் இதே தேதியில் ( நவம்பர் 10, 2022) ராகுல் காந்தி அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் ராகுல் காந்தி மைக்கை ஆஃப் செய்து விட்டு பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என விளக்குகின்றார். பின்பு, இங்கு என்னிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் மைக் தானாகவே ஆஃப் ஆகிவிடும்…. என்று பேசி இருந்தார்.
ஆனால் இந்த வீடியோவையும் வைரலாகும் வீடியோவையும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்விரண்டும் வெவ்வெறான வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இதனையடுத்து, ராகுல் காந்தி வேறு இடத்தில் இதேபோல் மைக்கை ஆஃப் செய்து பேசியுள்ளாரா என்பதை தேடினோம். இதில் இந்தூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி மைக்கை ஆஃப் செய்து பேசி இருந்ததை காண முடிந்தது. இந்த கூட்டத்தின் வீடியோ ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவின் 6 நிமிடம் 57 ஆவது நொடியில் மைக்கை ஆஃப் செய்து ராகுல் பேசி இருந்தார்.
இந்த வீடியோவின் கீ பிரேம்களை வைரலாகும் வீடியோவின் கீ பிரேமுடன் ஒப்பிட்டு பார்த்ததில், இந்த இரு வீடியோவும் ஒரே நிகழ்வில் வெவ்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.




நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் கூட்டத்தில் பேசியது, பாராளுமன்ற நிகழ்வை விளக்குவதற்காக, அவர் வேண்டுமென்றே செய்த விஷயம் என்பது தெளிவாகின்றது. இதனை எதிர் கட்சியினர் தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
Also Read: விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றதா?
Conclusion
ராகுல் காந்தி ‘மைக்’கை ஆன் செய்யாமல் கூட்டம் ஒன்றில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறான கோணத்தில் திரித்து பரப்பப்படுகின்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Result: Missing Context
Sources
YouTube Video By Rahul Gandhi, Dated November 27, 2022
YouTube Video By INC, Dated November 27, 2022
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)