இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் நுழைந்தவுடன் ராகுல் காந்தி இந்துக்கள் உடைக்கு மாறியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடாகாவில் நடைப்பெற்று வருகின்றது. இப்பயணத்தில் இதுவரை ராகுல்காந்தி எந்த ஒரு மத அடையாளத்தையும் குறிப்பிடாத பொதுவான வெள்ளை டீ சர்ட் ஒன்றையே அணிந்திருந்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவை அடைந்தவுடன் ராகுல் காந்தி இந்துக்கள் உடைக்கு மாறியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் நுழைந்தவுடன் ராகுல்காந்தி இந்துக்கள் உடைக்கு மாறியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் படம் பழைய படம் என்பதை அறிய முடிந்தது.
கடந்த மார்ச் மாதம் உத்திரப்பிரதேசத்தில் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும்போது வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலையத்திற்கும் வருகை புரிந்துள்ளனர்.
இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. உத்திரப்பிரதேச காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் படம் மார்ச் 4, 2022 அன்று பதிவிடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் கர்நாடகாவில் எடுக்கப்பட்டதல்ல, அது வாரணாசியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது.
இதனையடுத்து தேடுகையில் ராகுல் காந்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கர்நாடகாவில் கோயில், மசூதி, சர்ச், குருத்வாரா என பல இடங்களுக்கு சென்றதாக புகைப்படங்களை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அச்சமயங்களில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் வழக்கமாக பயன்படுத்தும் வெள்ளை நிற டீ சர்ட்டையே அணிந்துள்ளார்.
Also Read: 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளாரா?
Conclusion
இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் நுழைந்தவுடன் ராகுல்காந்தி இந்துக்கள் உடைக்கு மாறியதாக கூறி வைரலாகும் புகைப்படம் பழைய படம் என்பதையும், ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தில் இதுவரை பயன்படுத்திய உடையையே கர்நாடாகவிலும் பயன்படுத்தி வருகின்றார் என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் மலையாளத்தில் பிரசுரமாகியுள்ளது
Result: False
Sources
Tweet, from UP Congress on March 4, 2022
FB Post, from Rahul Gandhi on October 3, 2022
Youtube Video, published from Outlook March 6, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)