Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim
ஸ்டாலின் இந்திய இறையாண்மைக்கு எதிரான நபர் என்பது இந்த வீடியோவை பார்த்தாலே ஏற்படும். இதுவரை வட இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆதரவு ஊடகங்கள் தான் – கல்யாண் ராமன், பாஜக
Fact
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளை இந்தி பேசும் இளைஞர்களுக்கு வழங்க முயலும் பாஜக என்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். முழுமையான வீடியோ எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தி மொழி பேசும் மக்களுக்கு எதிராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை முழு வீடியோ ஒன்றின் தொடக்கத்தில் இதைப் பகிர்ந்த நிலையில், பாஜக கல்யாண் ராமன் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். “இந்த வீடியோவை பார்த்தால் என்ன தோன்றுகிறது என கூறுங்கள்… ஸ்டாலின் இந்திய இறையாண்மைக்கு எதிரான நபர் என்பது இந்த வீடியோவை பார்த்தாலே ஏற்படும். இதுவரை வட இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆதரவு ஊடகங்கள் தான். யூட்யூப் அமைப்புகள் சுமார் பத்து வீடியோக்களை வட இந்தியர்களுக்கு எதிராக உருவாக்கி பரப்பினர். இவர்கள் அனைவருமே திமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற பாணியில் அரசியலை வியாபாரமாக்க செய்யும் திமுகவினால் தமிழகத்திற்கும் தமிழக பொருளாதாரத்திற்கும் அழிவு தான் ஏற்படும். திமுகவையும் திமுகவின் தோழமை அமைப்புகளையும் ஒழிப்பது சமூகத்தின் தலையாய கடமை” என்று கல்யாண் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாகப் பரவுகின்ற வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் திருவண்ணாமலையில் மார்ச் 25, 2021 பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் இன்றைய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அப்பிரச்சாரத்தில்,
“திமுக இந்துக்கு விரோதி என்ற பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, யாருடைய நம்பிக்கைக்கும் திமுக எதிரானது அல்ல. இதை பாஜக புரிந்து கொள்ள 100 வருடங்கள் ஆகும். சமீபத்தில் தங்களது தேர்தல் அறிக்கையை பாஜக தமிழகத்திற்கு இந்தியில் வெளியிட்டிருந்தது. இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டு வேலைகளுக்கு நுழைப்பது மூலமாக பாஜகவை வளர்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அதை பழனிச்சாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம். தமிழ்நாட்டு மக்களோ, திமுகவோ அதை வேடிக்கை பார்க்காது. தனிப்பட்ட எந்த மொழிக்கும் திமுக எதிரி கிடையாது. இந்திக்கு என்றைக்கும் திமுக எதிரி கிடையாது. இந்தியே வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.
இந்தியைத் திணிக்கக்கூடாது என்பதுதான் திமுகவின் கோரிக்கை. அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று, வட மாநிலத்தவர்களை நாம் வெறுக்கவில்லை. ஆனால், இங்கு கல்வி, வேலை வாய்ப்புகளை தமிழகத்திற்குத்தான் தர வேண்டும் என்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எப்படி அங்குள்ள மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதையே தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கக்கூடாதா?”
என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோவையே தற்போது அவர் பேசிய “இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டு வேலைகளுக்கு நுழைப்பது மூலமாக பாஜகவை வளர்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள்” என்பதை மட்டும் வெட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகப் பரப்பி வருகின்றனர்.
Also Read: மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?
Conclusion
இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாகப் பரவுகின்ற வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video From, Thanthi Tv, March 25, 2021
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.