Fact Check
மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?
தமிழக பள்ளி கல்வித்துறை மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் வெளிட்ட இச்செய்தியில்,
“புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் மறைமுகமாக அமலாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவில் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி துவங்க உள்ள, இந்த தேர்வுக்கான அட்டவணையை, பள்ளிக் கல்வி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில், முதல் தேர்வாக மொழி பாடத்திற்கும், இரண்டாவதாக ஆங்கில பாடத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது.மூன்றாவது தேர்வாக, விருப்ப மொழி பாடம் என்ற, கூடுதல் மொழி தேர்வு இணைக்கப்பட்டு உள்ளது.மூன்றாவது மொழி என்றால், ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் என,எந்த மொழியாகவும்இருக்கலாம். இதில் இருந்து, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, தமிழகத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இரு மொழி கொள்கையை மாற்றி, மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் பார்க்கத் துவங்கி உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.“
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியினை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழக பள்ளி கல்வித்துறை மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இந்த ஆய்வில், தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வைரலாகும் இச்செய்தியை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கான பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இரு மொழிக்கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி தொடங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு கால கட்டங்களில் தெளிவுபடுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்துக்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.
2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு(தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து அவர்தம் தாய் மொழியையும் விருப்பப் பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவு படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்.
என்று பள்ளிக் கல்வி ஆணையர் குறிப்பிட்டிருந்தை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இத்தகவல் குறித்து மேலும் தெளிவு பெற, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் குறித்து தேடினோம். இத்தேடலில் இச்சட்டம் குறித்த தெளிவான விளக்கம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 வரை உள்ள வகுப்புகளுக்கு தமிழ்மொழியானது கட்டாய பாடமாக்க வேண்டும். இதன் பொருட்டு 1ஆம் வகுப்புக்கு 2006-2007 ஆம் கல்வியாண்டில் இருந்தும், 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு 2007-2008 ஆம் கல்வியாண்டில் இருந்தும் தொடங்கி, படிப்படியான முறையில் கற்பிக்கப்படுதல் வேண்டும். இம்முறையானது 10 ஆம் வகுப்பு வரையில் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் அவர் தாய் மொழியை ஒரு விருப்பப் பாடமாக கற்கலாம் என்றும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின் முழு வடிவம்: https://tnschools.gov.in/wp-content/uploads/2021/11/5.-91-The-Tamil-Nadu-Tamil-Learning-Act-13-of-2006.pdf
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெளிவாகுவது யாதெனில்,
- 1-லிருந்து 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும்
- தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாக மூன்றாவதாக கற்கலாம். ஒருவேளை அவர்கள் அதை விரும்பாவிடில் மூன்றாவது மொழி கட்டாயமில்லை.
- இச்சட்டமானது 2006 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 15 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.
இதன்படி பார்க்கையில் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாகஅமல்படுத்தி வருகின்றது என்று தினமலரில் வந்த செய்தி முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.
Conclusion
தமிழக பள்ளி கல்வித்துறை மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியுள்ளதாக தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Source
Department of School Education
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)