காவல்துறையினர் அபராதம் போட்டதால் காவல்துறை அதிகாரி ஒருவரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact Check/ Verification
மொழிப்பற்று, இனப்பற்று, சமயப்பற்று போன்றவை ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் அவற்றை பொது வெளியில் கொண்டு வந்து, மற்றவர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசுவதோ, எழுதுவதோ ஏற்புடையதல்ல.
நமது அரசியல் அமைப்பு சட்டப்படி இதுப்போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதுப்போன்ற தவறுகளை செய்து வருகின்றனர். மேலும் இச்செயல்களுக்கு சமூக ஊடகங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதை நம்மால் காண முடிந்தது. அவ்வீடியோவில் இஸ்லாமியப் பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்குகிறார்.
“காவல்துறை அபராத சல்லான் போட்டதால், இந்த வீடியோ, இந்தியாவில் என்ன நடக்கும், யார் நாட்டை நடத்துவார்கள், அனைவரின் எதிர்காலம் என்னவாக இருக்கும், உண்மை என்னவென்றால் நாட்டுக்கு வெளியில் இருக்கும் ஆபத்தை விட அதிகம் உள்ளே ஆபத்து உள்ளது.”
என்ற வாசகங்களுடன் இவ்வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இவ்வீடியோவை இதுவரை 62 பேர் மறுடிவீட்செய்துள்ளனர், 67 பேர் விரும்பியுள்ளனர்.
இவ்வீடியோவானது தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பரவியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இவ்வீடியோ குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
காவல்துறையினர் அபராதம் போட்டதால் காவல்துறை அதிகாரியை இஸ்லாமியப் பெண் அடித்ததாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோவின் ஃபிரேம்களை தனித்தனியாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு செய்ததில் இவ்வீடியோவானது 2018 ஆம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது என்று நம்மால் அறிய முடிந்தது. அதேபோல் அபராதம் போட்டதால் இந்த சமபவம் நடைப்பெற்றது என்று பரப்பப்படும் தகவலும் பொய் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் இச்சம்பவம் நடந்ததற்கான காரணமே வேறாகும்.
வைரலாகும் வீடியோவில் இருக்கும் இளைஞர் ஆதார் அட்டை பெறுவதற்காக காஜியாபாத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
வங்கிக்கு சென்றவர் வரிசையில் நிக்காமல் நேரே சென்றுள்ளார். வங்கி அதிகாரி அவரை வரிசையில் நிற்க சொல்ல, அது பிரச்சனையாக மாறியுள்ளது.
உடனே வங்கிக்கு வெளியில் இருந்த காவல் அதிகாரி இப்பிரச்சனையில் தலையிட்டு அந்த இளைஞரை வெளியே அனுப்பியுள்ளார். வெளியே சென்ற இளைஞர் தன் சகோதரியுடன் மீண்டும் வங்கிக்கு வந்து தகராறு செய்து, அக்காவலரை தாக்கியுள்ளார். அந்த வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளிவந்துள்ளது.

இதன்படி பார்க்கையில் அபராதம் போட்டதால் காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெளிவாகிறது.
Conclusion
காவல்துறை அதிகாரியை இஸ்லாமியப் பெண் அடித்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோ என்பதையும், காவல்துறையினர் அபராதம் போட்டதால் அப்பெண் அடித்தார் என கூறப்படும் காரணம் தவறானது என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Result: Misleading
Our Sources
Twitter Profile: https://twitter.com/vimal043/status/1352692253655928833
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)