திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“தற்போதைக்கு ஆசிரியர்களுக்கு வழக்கப்படும் ஊதியமே போதுமானது உள்ளது. அதனால் தொகுப்பு ஊதியம் நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை வழங்கப்படாது. தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவோம்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக நியூஸ்கார்ட் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இந்த ஆய்வில் கடந்த மாதமே (டிசம்பர் 28) ஆசியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை நம்மால் அறிய முடிந்தது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
மேலும், பொங்கல் பரிசாக ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட முதல்வர் இன்று ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பார்க்கும்போது வைரலாகும் நியூஸ்கார்டில் உள்ள தகவலானது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியானது. இருப்பினும் இந்த நியூஸ்கார்டை பலர் உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால், தந்தி தொலைக்காட்சி டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படும் இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று தந்தி தொலைக்காட்சி தரப்பில் வெளியிடப்பட்டிருந்த பதிவையே காண முடிந்தது.
Also Read: நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடமா?
Conclusion
ஆசிரியர்களை மருத்துவமனைகளை சுத்தம் செய்ய பயன்படுத்துவோம்; திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)