விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் இணைந்து ‘அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்கிற தலைப்புள்ள புத்தகத்தை வெளியிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இப்புகைப்படத்தை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிக்கின்றதா பதஞ்சலி நிறுவனம்?
Fact Check/Verification
‘அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்’ என்கிற புத்தகத்தை திருமாவளவனும் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் இணைந்து வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பதை அறிய முடிந்தது.
திருமாவளவன் அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செப்டம்பர் 17 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் பாசிசத்தை முறியடிப்போம் எனும் மாநாட்டை நடத்தினர். இவ்விழாவில் நானும் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் கலந்துக்கொண்டு உரையாடினோம் இவ்விழாவில் ‘இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் அரபிக்கள் நாம் எனும் வார்த்தைகளை சனாதன சங்பரிவார் சக்திகள் புகுத்தி தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும், ‘சமூக விரோதிகளின் திரிப்பிற்கு தோழர் முனைவர் திருமாவளவனின் விளக்கம்’ என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து மேலும் தேடியதில் திருமாவளவன் ‘பாசிசத்தை முறியடிப்போம்’ மாநாட்டில் கலந்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்களை செப்டம்பர் 18 அன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அதில் புத்தககம் வெளியிடும் படமும் இடம்பெற்றிருந்தது. அப்புத்தகத்தில் ‘இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்’ என்று மட்டுமே இருந்தது. அரபுக்கள் நாம் எனும் வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.
இதை அடிப்படையாக வைத்து பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட போலியான படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தினாரா பிரதமர் மோடி?
Conclusion
‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்’ என்கிற புத்தகத்தை திருமாவளவனும் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் இணைந்து வெளியிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியானப் படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)