Fact Check
12 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கத்தியால் குத்திய அண்ணன்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Claim
12 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கத்தியால் குத்திய அண்ணன்.
Fact
இத்தகவல் தவறானது என்று கேரளா போலீஸ் தெரிவித்துள்ளது.
“ஆலப்புழாவில் 12 வயது தங்கையை பலாத்காரம் செய்த வாலிபரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய அண்ணன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்னும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
12 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை அண்ணன் கத்தியால் குத்தியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் மாத்ருபூமி ஊடகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2025) அன்று இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்தியில் ரியாஸ் (25) என்பவனை விஷ்ணுலால்(25) மற்றும் சிபி(23) ஆகியோர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பெண் பெயரில் போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி ரியாஸுடன் பழகி, அவனை ஆலப்புழா பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து தாக்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரியாஸ் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.
இந்த கத்திக்குத்து சம்பவமானது ஒரு பெண்ணை மையமாக வைத்து நடந்ததாகவும், தொடர்ந்து இவ்வழக்கு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட தலைமை காவலர் கூறியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர்த்து 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக எந்த ஒரு தகவலும் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து தேடுகையில் மனோரமா ஆன்லைன் ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து நேற்று (ஆகஸ்ட் 4, 2025) செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் பெண் தோழியை பலாத்காரம் செய்ததற்காக ரியாஸை தாக்கியதாக குற்றவாளிகளில் ஒருவனான சிபி போலீஸில் வாக்குமூலம் கொடுத்தாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
போலீஸ் தரப்பில் கூறியதாக மனோரமா ஆன்லைனில் வெளியிட்டிருந்ததாவது;
19 வயதான சிபியின் தோழி ஊட்டியில் நகையை தொலைத்து விட்டு தேடியுள்ளார். அப்போது அங்கு வந்த ரியாஸ் அப்பெண்ணிடம் தான் நகையை கண்டதாகவும், அதை அருகிலிருக்கும் கடையில் கொடுத்ததாகவும் கூறியுள்ளான். நகையை வாங்கி தருவதாக கூறி அப்பெண்ணை காரில் ஏற்றி, அப்பெண்ணுக்கு மயக்க மருந்து அளித்து ரியாஸ் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து சிபி, அவனின் நண்பன் விஷ்ணு லாலுடன் சேர்ந்து பெண் பெயரில் போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி ரியாஸை வலையில் விழ வைத்து, அவனை ஆலப்புழா வர வைத்து தாக்கியுள்ளனர்.
இதன்படி பார்க்கையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.

தொடர்ந்து தேடுகையில் கேரள மாநில போலீஸின் மீடியா சென்டரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் வைரலாகும் தகவல் தவறானது என்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதில் தவறில்லை என்றாரா எஸ்.பி.வேலுமணி?
Conclusion
12 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை அண்ணன் கத்தியால் குத்தியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News report by Mathrubhumi on August 1,2025
News report by Manoramaonline on August 4,2025
Facebook Post by State Police Media Centre, Kerala on August 4,2025
இந்த செய்தி நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது. அச்செய்தியை இங்கே காணலாம்.