Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கோயம்புத்தூர் மாகராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளம் எனும் பகுதியில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்துமாறு கழிவறை கட்டப்பட்டிருந்தது. இக்கழிவறைக்கு கதவுகளும் இல்லாமல் இருந்தது. இதுக்குறித்து கோயம்புத்தூர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையாளர் தேவநாதன் அவரது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை பதிவிட்டார்.
இதனையடுத்து இச்செய்தியானது அனைத்து தமிழ் ஊடகங்களிலும் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலரும் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுகதான் இவ்வாறு ஒரு கழிப்பறையை கட்டியதாக விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ்…’ என்று தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்?
கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் இத்தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.
இரட்டைக் கழிவறை பிரச்சனை ஊடகங்களில் செய்திப் பொருளாகிய மாறியதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி இப்பிரச்சனைத் தொடர்பாக செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“கோயம்புத்தூர் மாநகராட்சி, 66 வார்டு, அம்மன்குளம் பகுதியிலுள்ள இக்கழிப்பிடம் 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் தனித்தனி கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.
இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைப்பெற்று வருகிறது. சீறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைப்பெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் (பொ) மரு.மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து அக்கழிவறை மறுசீரமைக்கப்பட்டு பெரியவர்கள் பயன்படுத்தும் சிறுநீர் கழிவறையாக தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கழிப்பறை 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இச்சமயத்தில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்கழிப்பறை குழந்தைகளுக்கான கழிப்பறை என்பதும் தெளிவாகின்றது.
Also Read: பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?
கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Coimbarore Corporation’s Press Release
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 16, 2025
Ramkumar Kaliamurthy
July 11, 2025
Ramkumar Kaliamurthy
June 30, 2025