Fact Check
பெரியார், அண்ணா பற்றிய வீடியோவில் தவறில்லை என்றாரா அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?
Claim
முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட பெரியார், அண்ணா பற்றிய வீடியோவில் தவறில்லை என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
Fact
இத்தகவல் தவறானதாகும். திண்டுக்கல் சீனிவாசன் தரப்பும், தந்தி டிவி தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
அண்மையில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களை விமர்சித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அஇஅதிமுக தலைவர்களும் கலந்துக்கொண்ட இந்த மாநாட்டில் இவ்வீடியோ ஒளிபரப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவில் தவறு ஒன்றும் இல்லை; திமுக தான் இதை அரசியல் செய்கிறது” என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட பெரியார், அண்ணா பற்றிய வீடியோவில் தவறில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசனை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம்.
அவர், “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. நான் இவ்வாறு கூறவே இல்லை” என்று பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து அஇஅதிமுகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்ட இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவரும் இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி டிவியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் தந்தி டிவி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து தந்தி டிவியின் டிஜிட்டல் துறை பொறுப்பாளர் வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் முற்றிலும் போலியானது, இந்த கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
இதனையடுத்து தேடுகையில் முருக பக்தர்கள் மாநாட்டில் அஇஅதிமுக தலைவர்கள் கலந்துக்கொண்டது குறித்தும், அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட வீடியோ குறித்தும் தெளிவுப்படுத்தி பதிவு ஒன்று அஇஅதிமுகவின் ஐடி விங் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில் அஇஅதிமுக இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அஇஅதிமுகவை சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் விழாவில் ஒளிப்பரப்பட்ட வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதை காண முடிந்தது.
Also Read: இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?
Conclusion
முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட பெரியார், அண்ணா பற்றிய வீடியோவில் தவறில்லை என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அஇஅதிமுக மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பும், தந்தி டிவி தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Dindigul Srinivasan, former AIADMK Minister.
Phone Conversation with Kovai Sathyan, National Spokesperson, AIADMK
Phone Conversation with Vinoth Kumar, Digital Head, Thanthi TV
X post from AIADMK IT Wing, Dated June 23, 2025