Fact Check
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக பரவும் வீடியோ உண்மையா?
Claim
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற காவல்துறையினர்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவமாகும்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை காவல்துறையினர் வாயை பொத்தி இழுத்துச் சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை தாக்கி இழுத்துச் சென்ற காட்சி ….ஒரு நாயை கல்லால் எடுத்து அடித்தால் பீட்டா அமைப்பு ஓடி வந்து கேள்வி கேட்கிது ஸ்டாலின் ஆட்சில நடக்கக்கூடிய கொடுமைகள் எல்லாம் எந்த ஊடகத்திலும் வர மாட்டேங்குது” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டமா இது?
Fact Check/Verification
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, கடந்த ஜனவரி 02, 2021 அன்று திமுக சார்பில் கோவையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அன்றைய அதிமுக ஆட்சியில் இடம்பெற்றிருந்த அதிமுக அமைச்சர் வேலுமணி குறித்து திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் எதிர்த்து பேசிய நிலையில் அப்போது பெண் ஒருவர் அவரை நோக்கி குறுக்கிட்டு பேசி தகராறில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த திமுகவினர் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக கூட்டத்திலிருந்து அப்பெண்மணியை வெளியேற்றிய திமுகவினர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் உறுதியாகியது.
குறிப்பிட்ட நிகழ்வு திமுகவின் கிராமசபை கூட்டத்துடன் தொடர்புடையது; அதிமுக-திமுக இரண்டு கட்சிகளும் தொடர்புடைய சம்பவம் என்றாலும் கடந்த 2021 ஜனவரியில் இச்சம்பவம் நடைபெற்றது அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆகும். அப்போது, ஆட்சியில் முதல்வராக இடம்பெற்றிருந்தவர் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Media report by News Minute, dated January 02, 2021
Media report by BBC Tamil, dated January 02, 2021