துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையின்போது அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு வைரலான முஷ்கான் என்கிற மாணவியை கெளரவிக்கும் விதமாக அவரது புகைப்படம் மற்றும் பெயர் ஒளிர்ந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிவதற்கான தடை தொடர்பாக எழுந்த கலவரம் அங்கு பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
ஹிஜாப் அணிந்த ஒரு பிரிவு மாணவிகளுக்கு எதிராக மற்றொரு பிரிவு மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்த நிலையில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஷ்கான் என்கிற பெண்ணை வழிமறித்து காவித்துண்டணிந்த மாணவர்கள் கோஷமிட்டனர்.
உடனடியாக, அம்மாணவியும் ஒற்றை ஆளாக அவர்களுக்கு எதிராக ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டார். அவருடைய இந்த வீடியோ செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் எதிர்ப்புகளும் குவிந்தன.
இந்நிலையில், துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் முஷ்கான் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்ததாக“அல்லாஹு அக்பர் என்று துணிவுடன் கூறிய வீரப் பெண்மணி முஸ்கானுக்கு, உலகின் மிக உயரமான கட்டிடம்
“புர்ஜ் கலிபா”வில் முஸ்கான் கவுரவிக்கப்பட்டார்” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
துபாயின் மிக உயர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமான முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்து அவர் கெளரவிக்கப்பட்டார் என்பதாக பரவுகின்ற வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், துபாயின் புர்ஜ் கலிபாவில் முஷ்கான் பெயர் மற்றும் புகைப்படம் என்பதாக வைரலாகும் குறிப்பிட்ட வீடியோவினை சிறுசிறு ஃப்ரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச்க்கு உள்ளாக்கினோம். ஆனால், அதில் நமக்கு உபயோகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் வீடியோ தொடர்பாக கீவேர்ட் சர்ச் முறையில் தேடியபோது வாட்ஸ்அப் என்கிற இணையதளத்தில் ஜனவரி 4, 2022 தேதியிட்ட கட்டுரை ஒன்று கிடைத்தது.

அதன்படி, வருகின்ற மார்ச் 31 வரையில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நியூ இயர் லேசர் ஷோ தொடரும் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான தேடலில் மேலும் இரண்டு வீடியோக்கள் நமக்கு யூடியூபில் கிடைத்தன.
குறிப்பிட்ட வைரல் வீடியோவையும் யூடியூபில் கிடைத்த வீடியோக்களையும் ஒப்பிட்டபோது சில காட்சிகள் அப்படியே ஒத்துப் போயின.

மேலும், புர்ஜ் கலிபாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் தேடிய போது லேசர் ஷோ குறித்த வீடியோ கடந்த ஜனவரி 6, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஒரு பகுதியை எடுத்து எடிட் செய்தே முஷ்கான் குறித்த வைரல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெரிய வந்தது. அதற்கான புகைப்படங்களையும் இங்கே இணைத்துள்ளோம்.




தொடர்ந்து, குறிப்பிட்ட வைரல் வீடியோவில் புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்து வீடியோ முடிவடைந்த பிறகும் முஷ்கான் என்கிற பெயர் வீடியோவில் அப்படியே இடம்பெற்றுள்ளது. கட்டிடத்திற்கும், பெயருக்கும் தொடர்பில்லாமல் பெயர் மட்டும் தனியாக வீடியோ கடைசியில் மிளிர்கிறது.

அதாவது, முஷ்கானின் பெயரும் அவரது புகைப்படமும் புர்ஜ் கலிபாவின் வீடியோவில் சிலரால் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதும் இதன் மூலம் தெரிகிறது. அது மட்டுமின்றி, முஷ்கானின் புகைப்படமும் குறிப்பிட்ட வீடியோவில் கட்டிடத்தின் பகுதியில் பொருந்தாமல் தெரிகிறது.
குறிப்பிட்ட வைரல் வீடியோவில், லேஷர் ஷோ வீடியோ காட்சியுடன், நடிகர் ஷாரூக்கான் பிறந்தநாள் போது இடம்பெற்ற மியூசிக்கல் பவுண்டைன் காட்சியையும் இணைத்துள்ளனர்.
Conclusion
துபாயின் மிக உயர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமான முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்து அவர் கெளரவிக்கப்பட்டார் என்பதாக பரவுகின்ற வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media
Our Sources
Burj Khalifa: Instagram/Facebook/Twitter
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)