திருமணம் ஒரு பாவச்செயல்; இந்துக்கள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பங்கேடாவில் நடைபெற்ற கடினாஷினி என்கிற பாரம்பரிய விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
இந்நிலையில், “திருமணம் ஒரு பாவச்செயல். ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் செய்து கொள்வதால்தான் குழந்தை பிறக்கிறது. கர்மாவின் பலனை அனுபவித்து அல்லலுறுகிறது. இந்துக்கள் திருமணம் செய்வதை தவிர்த்தால், கர்மாவிலிருந்து தப்பலாம். ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்வது நல்லது. என் யோசனையின்படி மோடி அப்படித்தான் செய்தார்” என்று அவர் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்ததாக பரவும் தவறான தகவல்!
Fact Check/Verification
திருமணம் ஒரு பாவச்செயல் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டு விகடன் செய்திக்குழுமம் வெளியிட்டதாகப் பரவி வருகின்ற நிலையில், அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
அப்போது, குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டில் உள்ள அதே புகைப்படம் மற்றும் 29-04-2022 என்கிற வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதே தேதியுடன் கூடிய உண்மையான நியூஸ்கார்டினை கண்டறிந்தோம்.
அதில், “வன்முறையால் எந்த பயனும் இல்லை. வன்முறையால் இங்கு யாருக்கும் எந்த பயனும் இல்லை. வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது” என்று அவர் மகாராஷ்டிரா விழாவில் பேசிய செய்தியே இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு ஆசிரியரான பிரிட்டோவை தொடர்பு கொண்டு பேசியபோது, ”எங்களுடைய உண்மையான நியூஸ்கார்டினை எடுத்து இந்த போலி நியூஸ்கார்டினை உருவாகியுள்ளனர். இதிலுள்ள செய்தி போலியானது” என்று விளக்கமளித்தார்.


தொடர்ந்து, மகாராஷ்டிர விழாவில் அவர் பேசிய உண்மையான வீடியோவையும் இங்கே இணைத்துள்ளோம். அதில் அவர், “வன்முறையால் இங்கு யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது அதன் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் எப்போதும் வன்முறையற்றவர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவுமே இருக்க வேண்டும். அதற்கு முக்கியமாக அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து, மனிதநேயத்தைக் காப்பது அவசியம்” என்றே பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஒரு பாவச்செயல் என்று அவர் பேசியிருக்கவில்லை என்பதும் இதன்மூலமாக தெளிவாகிறது.
Conclusion
திருமணம் ஒரு பாவச்செயல் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media/Altered photo
Our Sources
Vikatan Facebook page, 29-04-2022
I.Britto Irudayaraj, Digital Team, Junior Vikatan
ABP News, Youtube
Vikatan article Link
Economic Times (ANI Video);29-04-2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)