பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் துக்ளக் இதழின் 52 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றியிருந்தார்.
இந்நிலையில், “தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே என்கிற கீதா சாரத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருமணம் ஒரு பாவச்செயல் என்றாரா ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்?
Fact Check/Verification
பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டு பாலிமர் செய்திகளுடைய லோகோவுடன் வைரலாவதால், அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப்பக்கத்தில் தேடினோம். மேலும், குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டில் நிர்மலா சீதாராமனுக்கு பின்புறமாக மறைந்த நடிகர், பத்திரிக்கையாளர் மற்றும் துக்ளக் நிறுவனரான சோ.ராமசாமி படம் இடம்பெற்றிருந்ததால் துக்ளக் ஆண்டு விழா தொடர்பான செய்திகளிலும் தேடினோம்.
அப்போது, பாலிமர் செய்திகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு உடனடியாக அதனைச் செய்யும்.” என்று அதே புகைப்படத்துடன் கூடிய நியூஸ்கார்டு இடம் பெற்றிருந்தது. அதனை எடிட் செய்து குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டு பரப்பப்பட்டு வருகிறது என்பது நமக்கு உறுதியானது.


மேலும், துக்ளக் ஆண்டு விழா நிகழ்வு தொடர்பான முழுமையான வீடியோவைப் பார்த்தோம். அதிலும் அவர் வைரல் நியூஸ்கார்டில் இருப்பது போன்று கீதா சாரம் குறித்து பேசியிருக்கவில்லை என்பது தெளிவாகியது. பாலிமர் தரப்பிலும் வைரல் நியூஸ்கார்டு போலியானது என்பதை உறுதி செய்து கொண்டோம்.
Conclusion
பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated Content/False
Our Sources
Polimer News,09-05-2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)