டெல்லியில் நேற்று(26/01/2020) நடந்த டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் விபத்து வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களும் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Fact Check/Verification
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். மத்திய அரசு இப்போரட்டத்தை நிறுத்துவதற்காக விவசாயிகள் சங்கங்களுடன் இதுவரை பலக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
ஆயினும் இந்தப் பேச்சவார்த்தைகள் தகுந்த பலன் தராததால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில் இந்தியக் குடியரசு தினமான நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி செல்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இப்பேரணியை போலீசார் தடுத்த நிறுத்த முற்பட்டபோது இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. சில கட்சியைச் சார்ந்த சமூக விரோதிகள் இப்பேரணியில் கலந்ததாலேயே இக்கலவரங்கள் ஏற்பட்டதாக விவசாய சங்கங்கள் கூறியுள்ளது.
இக்கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். போலீசார் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டால்தான் இவ்விவசாயி உயிரிழந்தார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
ஆனால் அத்தகவல் தவறானது என்பதையும், டிராக்டர் கவிழ்ந்ததாலேயே அவர் உயிரிழந்தார் என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து, “விவசாயிகள் டிராக்டர் பேரணி; துப்பாக்கிச் சூட்டில் விவசாயி மரணம்?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது விவசாயி இறப்புக்கு காரணமான டிராக்டர் கவிழ்ந்த வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
டிராக்டர் பேரணி கலவரத்தில் உயிரிழந்த விவசாயியின் வீடியோ ANI உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்திருந்தது.
இந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஒப்பிட்டுப் பார்த்தோம்.
அவ்வாறு ஒப்பிட்டதில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ தவறான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
வாசகர்களில் புரிதலுக்காக இவ்விரு வீடியோக்களின் புகைப்படங்களையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதன்படி பார்க்கையில் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவுக்கும் இறந்து போன விவசாயிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
இதன்பின் உண்மையில் இவ்வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதை அறிய அவ்வீடியோவை தனித்தனி ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் இதன் உண்மைத்தன்மை நமக்கு விளங்கியது.
டெல்லி-நொய்டா எல்லைப் பகுதியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரதிய கிசான் யூனியனைச் சார்ந்தவர்கள் டிராக்டரில் வட்டமிட்டு பிரச்சாரம் செய்யும்போது டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இந்த வீடியோவையே தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிகழ்வில் இருவருக்கு சிறிய அளவு அடிப்பட்டுள்ளது. இதுக்குறித்த செய்தி NDTVயில் வெளிவந்துள்ளது.

Conclusion
சமூக வலைத்தளங்களில் டெல்லி டிராக்டர் பேரணி கலவரத்தில் உயிரிழந்த விவசாயியின் வீடியோ என்று பரப்பப்படும் வீடியோ தவறானது என்பதையும், அவ்வீடியோ டெல்லி-நொய்டா பகுதியில் எடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Source
CTR Nirmalkumar: https://twitter.com/CTR_Nirmalkumar/status/1354119346319192067
ANI: https://twitter.com/ANI/status/1354061159784095744
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)