நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு (செப்டம்பர் 27, 2020) அமலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று (நவம்பர் 19) இந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, “வேளாண் சட்டங்களைப் போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும், இல்லாவிடில் பாராளுமன்றம் முன்பு தீக்குளிப்பேன்” என்று என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியதாக ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துரு ( Font) ஏபிபி நாட்டில் வழக்கமாக பயன்படுத்தும் எருத்துருவிலிருந்து வேறுபட்டிருந்தது. அதேபோல் ஏபிபி நாடு நியூஸ்கார்டடுகளில் பயன்படுத்தப்படும் லோகோ வாட்டர்மார்க்கும் வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படவில்லை.
எனவே இது போலியான நியூஸ்கார்டாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மையானது என்று நம்பி பகிர்ந்து வருவதால், இதை முழுமையாக ஆராய்ந்து இதுக்குறித்து விளக்க முடிவு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
“திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச்சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்” என்று வன்னி அரசு கேள்வி எழுப்பியதாக ஏபிபி நாடு நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
உண்மையான நியூஸ்கார்ட் போலியான நியூஸ்கார்ட்
இதனைத் தொடர்து ஏபிபி நாட்டின் ஆசிரியர் மனோஜ் பிரபாகரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை நமக்கு உறுதி செய்தார்.
இதன்பின் வன்னி அரசு அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர்,
“பொய்யான பரப்புரையை தொடர்ந்து முன்னெடுக்கும் கருத்தியல் வலிமையற்ற கோழைகள் கண்டு பரிதாபப்படுகிறேன்.”
என்று பதிலளித்தார்.
Also Read: நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று வன்னி அரசு கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.
Conclusion
நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Vanni Arasu, Deputy General Secretary, VCK
Manoj Prabakar, Editor, ABP Naadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)