Fact Check
விராட் கோலி சதத்தை தடுக்க முயன்ற பாகிஸ்தான் வீரரின் பேண்ட் கழன்றதா?
Claim
விராட் கோலி சதத்தை தடுக்க முயன்ற பாகிஸ்தான் வீரரின் பேண்ட் கழன்றது.
Fact
இவ்வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். கடந்த நவம்பரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இடையே நடந்த டி20 தொடரின்போது நடந்த சம்பவத்தை இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த போட்டியின்போது நடந்ததாக பரப்பப்படுகின்றது.
நடந்து வரும் ஐசிசி சாம்பியன் கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் இந்தியா வென்றது. இப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
இந்நிலையில் விராட் கோலி சதமடிக்க அடித்த பந்தை பவுண்டரி லைனில் தடுக்க முயன்ற பாகிஸ்தான் வீரரின் பேண்ட் கழன்றதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசினாரா?
Fact Check/Verification
விராட் கோலி சதத்தை தடுக்க முயன்ற பாகிஸ்தான் வீரரின் பேண்ட் கழன்றதாக பரப்பப்படும் வீடியோவானது இரண்டு காட்சிகளை மேலும் கீழுமாக இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
மேலுள்ள காட்சியில் கேப்டன் ரோஹித் சர்மா சிக்சர் கேட்க, விராத் கோலி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சியும், கீழுள்ள காட்சியில் பாகிஸ்தான் வீரர் பவுண்டரியை தடுக்க முயலும்போது அவரின் ஆடை கழன்று வரும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் மேலே காணப்பட்ட காட்சியில் பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த சீருடையும், கீழே காணப்பட்ட காட்சியில் பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த சீருடையும் மாறுப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. மேலே இருந்த காட்சியில் இளம்பச்சை நிற டீ சர்ட் அணிந்திருந்தனர்; கீழே இருந்த காட்சியில் அடர் பச்சை நிற டீ சர்ட் அணிந்திருந்தனர்.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இருவீடியோக்களையும் தனித்தனியாக ஆராய முடிவு செய்து, முன்னதாக மேலுள்ள வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் அவ்வீடியோவின் நீண்ட வடிவமானது ஐசிசியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வீடியோவில் கோலி பந்தை பவுண்டரிக்கு விரட்டும்போது எந்த வீரரும் தடுக்க முயலவில்லை.

இதனையடுத்து கீழுள்ள வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் நவம்பர் 19, 2024 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வீடியோவிலிருக்கும் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அடித்த பந்தை பாகிஸ்தான் அறிமுக வீரர் ஜஹந்தத் கான் பவுண்டரி லைனில் தடுக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

cricket.com.au என்கிற எக்ஸ் பக்கத்தில் இதுக்குறித்த வீடியோவும் பகிரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியில் நடந்த சம்பவத்தை அண்மையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நடந்ததாக எடிட் செய்து பரப்பப்படுகின்றது என்பது உறுதியாகின்றது.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
விராட் கோலி சதத்தை தடுக்க முயன்ற பாகிஸ்தான் வீரரின் பேண்ட் கழன்றதாக பரப்பப்படும் வீடியோவானது எடிட் செய்யப்பட்டதாகும். கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தானுக்கிடையே நடந்த போட்டியின் காட்சியும், அண்மையில் நடந்த இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே நடந்த போட்டியின் காட்சியும் இணைத்து அவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Video by ICC, dated February 23, 2025
Report by Times of India, dated November 19, 2024
X’ Video by cricket.com.au, dated November 18, 2024
Self Analysis