மாட்டுக்கறி உண்ணலாம் என்பதாக தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தில் துறவியான காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மாட்டுக்கறி உண்ணலாம் என்று காஞ்சி மடத்தின் மறைந்த பீடாதிபதியும், காஞ்சி ஜகத்குரு சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் என்றழைக்கப்பட்ட மகா பெரியவர் என்று அழைக்கப்படுபவருமான காஞ்சி சங்கராச்சாரியார் தனது ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் யக்ஞம் என்கிற தலைப்பில் கூறியிருக்கிறார் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இதுகுறித்து நமது வாசகம் ஒருவர் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
மாட்டுக்கறி உண்ணலாம் என்பதாக காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்பதாக பரவும் புகைப்படத் தகவல் குறித்த பின்னணி அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது. மேலும், மாட்டுக்கறி பற்றி சங்கராச்சாரியார் கூறியிருப்பதாக மற்றொரு தகவலும் பகிரப்பட்டுள்ளது.
எனவே, காஞ்சி மடத்தின் காமகோடி என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெய்வத்தின் குரல் புத்தகப் பதிவில், யஞ்யம் என்கிற பகுதியை ஆராய்ந்தோம்.
ஆனால், குறிப்பிட்ட அப்பகுதியில் மாட்டுக்கறி குறித்த வாசகங்கள் இல்லை. மேலும், யாகங்களில் பலியிடுவது பற்றிய பகுதியில், “யக்ஞம் பண்ணுவது பாபமா? புண்ணியமா? மிச்ரமா (இரண்டும் கலந்ததா)? மத்வாசாரியர், ‘பசுவைக் கொன்று யாகம் பண்ணக்கூடாது; மாவால் பசுவின் வபையைப் போல் பண்ணி ஆஹூதி பண்ண வேண்டும்’ என்று கருணையால் ஏற்பாடு பண்ணினார். (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை; எந்தப் பிராணிக்கும் ஸம்ஸ்கிருதத்தில் பசு என்றே பெயர்).” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வேதங்களில் பலி கொடுக்கப்படும் எல்லா பிராணிகளுமே பசு என்றே அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாட்டுக்கறி உண்ணலாம் என்று சங்கராச்சாரியார் சொல்லியதாக பரவும் தகவல் குறித்து மேலும் ஆராய்ந்தபோது, திருவள்ளுவரின் குரல் ஒன்றை முன்வைத்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ பசுபலி உள்ளதிலும், யக்ஞப் பிரஸாதமாக ஹோமம் செய்து மிஞ்சியதில் ரொம்பக் கொஞ்ச அளவே சாப்பிட வேண்டும்.
ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. ‘நிரூட பசுபந்தம் ‘ எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது.

‘கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.
மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவ ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யக்ஞத்தை கண்டித்தாலும் சரி, ‘பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள்’ என்றால் கொஞ்சங்கூட சரியில்லை.
இப்போது ஒரு மருந்தைப் பரீக்ஷிப்பது என்பதற்காக லாபரட்டரிகளில் எத்தனை ஜீவன்களைக் கொல்கிறார்கள்? இப்படியே ஒரு பெரிய க்ஷேமத்துக்காகச் சின்ன ஹானியையும் உண்டாக்கலாம் என்றே யக்ஞங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாஸ்தவத்தில் ஹானியும் இல்லை; அந்தப் பசு ஸத்கதி பெறுகிறது என்பதே நம்பிக்கை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகங்களில் விலங்குகளைப் பலிக்கொடுப்பது குறித்தவிளக்கம் இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்றுள்ள வாக்கியங்கள் தவறான புரிதலில் ‘மாட்டுக்கறி உண்ணலாம்’ என்பதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறியதாக குறிப்பிட்ட புகைப்படம் வைரலாகிறது.
மேலும், குறிப்பிட்ட வார்த்தைகள் ஜீவஹிம்சை செய்யலாமா? என்கிற பகுதியில் இடம்பெற்றுள்ளன; புகைப்படத்தில் இருப்பது போன்று யக்ஞம் என்கிற பகுதியில் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தை நேரடியாக காஞ்சி பெரியவர் எழுதவில்லை; அப்புத்தகம் அவருடைய கருத்துக்களைக் கேட்டு, ஒன்றிணைத்து அவரது சீடரும், ஆன்மிக எழுத்தாளரான ரா.கணபதி என்பவர் எழுதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
மாட்டுக்கறி உண்ணலாம் என்பதாக காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்பதாக பரவும் புகைப்படத் தகவல் தவறான புரிதலில் பரவுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Kanchi Kamakoti beedam:https://www.kamakoti.org/tamil/Kural39.htm
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)