பாஜக அலுவலகத்தில் குண்டு வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் பாஜகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பானது. இச்சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இச்சம்பவத்தில் திமுகவின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் கராத்தே தியாகராஜனின் முன்னாள் டிரைவர் என்றும், இரண்டு மாத சம்பள பாக்கியை தர மறுத்ததால் கோபம் கொண்டு பாஜக அலுவலகத்தில் குண்டு வீசினேன் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்ததாகவும் நியூஸ்கார்ட் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கருக்கா வினோத் பாஜகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று நியூஸ்கார்ட் ஒன்று வைரலானனதைத் தொடர்ந்து இதன் உண்மையறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
“நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ வினோத் குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை” என்று குண்டு வெடிப்பு விவகாரத்தில் காவல்துறை விளக்கமளித்ததாக புதிய தலைமுறை நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் கார்க்கி பவாவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை உறுதி செய்தார்.
இதனையடுத்து கராத்தே தியாகராஜன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அதற்கு அவர்,
“இது முற்றிலும் பொய்யான தகவல். கருக்கா வினோத் என்பவரை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. இப்படி ஒருவர் இருப்பதே எனக்கு அன்றுதான் தெரியும்.”
என்று விளக்கமளித்தார்.
Also Read: நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?
Conclusion
பாஜக அலுவலகத்தில் குண்டு வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் பாஜகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இதேபோல் தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானது. அதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து பொய் என்று விளக்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Result: Fabricated
Our Sources
Karate Thiagarajan, BJP
Karki Bava, Puhiya Thalaimurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)