கலைஞர் கருணாநிதி அவர்கள் பொது மேடையில் இந்திராகாந்தி காலில் விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Fact Check/Verification
திமுக மற்றும் அதிமுகவுக்கு ஆணிவேராக இருந்தது, பெரியாரின் திராவிடக் கழகம். திராவிடக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது சுயமரியாதை. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அனைத்து மக்களும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்பதே இதன் அடிநாதமாகும்.
திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்த திமுகவும், திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் இதே கொள்கையைப் பின்பற்றி வந்தன.
இக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இவ்விருக் கட்சியைச் சார்ந்தவர்களும் ஒருவருக்கொருவரை விமர்சிப்பதும், திட்டிக் கொள்வதும் அடிக்கடி நிகழ்வாகும்.
தற்போது கலைஞர் அவர்கள் இந்திராகாந்தி அவர்களின் காலில் விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பரவி வரும் இவ்வீடியோவின் உண்மைப் பின்னணிக் குறித்து அறிய இதை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மை என்ன?
வெறும் மூன்றே வினாடிகள் ஓடும் இவ்வீடியோவைக் கூர்ந்து கவனித்தபோது, கலைஞர் ஒரு பெண்மணிக்கு மாலை அணிவித்துவிட்டு, அவர் காலைத் தொட்டுக் கும்பிடுகிறார் என்பது முற்றிலும் உண்மை என்பது நமக்குத் தெளிவாகிறது.
ஆனால் அப்பெண்மணி இந்திராகாந்தி அம்மையாரா என்பதே கேள்வி. இக்கேள்விக்கு பதிலாக அமைந்தது, தமிழரிமா வனத்தையன் என்பவரின் ஃபேஸ்புக் பதிவு.
அப்பதிவில் அவர் கூறி இருந்ததாவது,
ஒரு சிலர் ஒரு வீடியோ கிளிப்பிங்கைப் போட்டு “இந்திராகாந்தி காலடியில் கலைஞர் எதை தேடுகிறார்” என்று கேட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்..!
நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இந்திராவின் உயரம் எவ்வளவு..? ( 163 செ.மீ). கலைஞரின் உயரம் எவ்வளவு..? ( 152 செ.மீ ). ஆனால் வீடியோவில் இருக்கும் பெண்மணியின் உயரம் கலைஞரின் உயரத்தை விட குறைவாக இருக்கிறது. இது ஒரு சாதாரண பார்வை. எளிமையான கணக்கு.
அடுத்து அரசியல் கணக்கிற்கு வருவோம். அந்த வீடியோவில் இருக்கும் கலைஞரின் வயது 60 வயதிற்கு மேல். அதாவது 1980 க்கு பிறகு.
அப்படியென்றால் அந்த சங்கிப்பயல் சொன்னது சரிதானோ..? 1980 கடற்கரை பொதுக்கூட்டத்தில் கலைஞரும், இந்திராவும் ஒரே மேடையில் தோன்றியதும், நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக …! என்று பேசியதும் உண்மை.
அந்த பொதுக்கூட்ட மேடையில் தான் கலைஞர் இந்திராவின் காலில் விழுந்து வணங்கினார் என்று சங்கி சொல்கிறான். அப்படியும் இருக்கலாமோ என்று நினைத்து நாம் கலைஞர் அருகில் நிற்போரை கவனித்தால் அங்கே நம் மந்திரகோல் மைனர் நாஞ்சிலார் (நாஞ்சில் மனோகரன்) நிற்கிறார்..!
1980 நாடாளுமன்ற தேர்தலின் போது நாஞ்சிலார் திமுகவில் இருந்ததாக என் சிற்றறிவிற்கு எட்டவில்லை.
அக்கால கட்டத்தில் அன்னார் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எப்படி கலைஞரோடு ஒரே மேடையில்..?? நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வென்று இந்திரா பிரதமரான பிறகுதான் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பிறகு தான் நாஞ்சிலார் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதையெல்லாம் யூகித்தரிய முடியாத சங்கி மற்றும் அடிமை மண்டூகங்கள் அல்லவே நாம்..! அப்போ அந்த மேடையில் கலைஞர் யாருக்கு மாலை அணிவித்தார், யார் காலை தொட்டு வணங்கினார்..? யாரோ ஒரு முதிய பெண்மணியின் காலை தொட்டு வணங்கியிருக்கிறார்..! என் கருத்தில் அவர் அண்ணாவின் இல்லாள் ராணி அண்ணாதுரையாக இருக்க வேண்டும்..!
கலைஞர் ஒரு முறை காமராஜரின் காலை தொட்டு வணங்கியுள்ளார்..! அப்புறம் ராணியார் மட்டுமே..!!
விபரம்..!
××××××1987 செப்டம்பர், 16 அன்று அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக அண்ணாவின் மனைவி அண்ணியார் ராணி அம்மையார் அவர்கள் அழைக்கப்பட்டு மேடையில் சிறப்பு செய்யப்பட்டார்கள். அந்த மேடைக் காட்சியைத்தான் அந்த அடிமை நாய் பதிவுசெய்துள்ளது. இவனெல்லாம் அதிமுக வாம். அப்போ அதிமுக என்ற கட்சிக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்மந்தம்..?

இப்பதிவுத் தொடர்பாக தமிழரிமா வனத்தையன் அவர்களை நம் நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். அப்போது அவர் இப்பதிவில் குறிப்பிடாத சில விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.
அதில் முக்கியமான விஷயம், கலைஞரும் இந்திரா காந்தி அவர்களும் ஒன்றாக கலந்துக் கொண்ட கடற்கரைக் கூட்டமானது திறந்தவெளியில் நடந்தது. ஆனால் வைரலான வீடியோவில் இருக்கும் நிகழ்வானது, இரவில் மேடை அமைத்து நடந்துள்ளது. அதன்படி பார்த்தாலும் இந்நிகழ்வில் இருப்பது இந்திரா காந்தி அல்ல என்பது தெளிவாகிறது.
இதைத் தவிர்த்து, DMK4TN எனும் டிவிட்டர் பக்கத்தில் வைரலான வீடியோவை ஒரு கட்டத்தில் நிறுத்தி கலைஞர் மாலையிட்டு வணங்கிய பெண்மணியின் முகத்தைச் சுட்டிக்காட்டி, இவர் இந்திரா காந்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலேக் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவைக் கண்டபின், வீடியோவில் காணப்படுபவர் இந்திராகாந்தி இல்லை என்பது நமக்கும் தெளிவாகிறது.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால் கலைஞர் ஒரு பெண்மணியின் காலில் விழுந்துக் கும்பிட்டது உண்மை. ஆனால் அவர் நிச்சயமாக இந்திரா காந்தி இல்லை.
சமூக வலைத் தளங்களில் பரப்படும் செய்தியானது முற்றிலும் பொய்யானது.
Result: Misleading
Our Sources
DMK4TN: https://twitter.com/DMK4TN/status/1318458677397913600
Thamizharimaa vanaithiyan: https://www.facebook.com/photo?fbid=972466966574197&set=a.129905514163684
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)