Fact Check
பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் இறந்தார்.
Fact
இத்தகவல் தவறானதாகும். கிரண் ஷெகாவத் 2015 ஆம் ஆண்டிலேயே மரணித்துவிட்டார். உக்ரேனிய மொழியில் வெளிவந்த மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பு வீடியோவை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான போரில் 27 வயதான கிரண் ஷெகாவத் மரணித்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் இறந்ததாக பரப்பப்படும் வீடியோவில் படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் உயர் ரக கேமரா இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை InVID உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “விட்சிக் (Vitsik)” என்பவரின் டிக்டாக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ பிப்ரவரி 27, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இப்பதிவில் “பிரதர்ஸ்”, “படப்பிடிப்பு” உள்ளிட்ட வார்த்தைகள் ஹேஷ்டேகுகளாக உக்ரேனிய மொழியில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் விட்சிக்கின் யூடியூப் பக்கத்தில் பிரதர்ஸ் எனும் தலைப்பில் பிப்ரவரி 24, 2025 அன்று மியூசிக் வீடியோ ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவின் காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இவ்வீடியோவானது உக்ரேனிய மொழியில் உருவாக்கப்பட்டிருந்தது. உக்ரேனிய ராணுவ வீரர்களின் பங்களிப்போடு இவ்வீடியோ உருவாக்கப்பட்டதாக இவ்வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் வீடியோவில் காணப்படும் பெண்மணியின் பெயர் மரியானா செசேலு என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மரியானா செசேலு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பதிவு ஒன்றின் வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் இந்தியா – பாகிஸ்தான் போருக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
இதனையடுத்து கிரண் ஷெகாவத் என்பவர் இப்போரில் இறந்தாரா என்று தேடினோம். இத்தேடலில் அண்மை போரில் இப்பெயரில் யாரும் இறந்ததாக எவ்வித செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
ஆனால் 2015 ஆம் ஆண்டில் கப்பற்படை லெப்டினன்ட் கிரண் ஷெகாவத் என்பவர் டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். பணியில் உயிரிழந்த முதல் பெண் ராணுவ வீரர் என்று கூறி மார்ச் 26, 2015 அன்று NDTV செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதுப்போன்று வேறு சில ஊடகங்களும் அச்சமயத்தில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
- கிரண் ஷெகாவத் அண்மையில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் இறக்கவில்லை; அவர் 2015 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார்.
- அதேபோல் கிரண் ஷெகாவத் மரணித்ததாக பரவும் வீடியோவும் உண்மையில்லை; அது ஒரு மியூசிக் வீடியோவாகும். வீடியோவில் காணப்படும் பெண்னின் பெயர் மரியானா செசேலு என்பதாகும்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் இறந்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
TikTok post from Vitsik, Dated February 27, 2025
YouTube Video from Vitsik, Dated February 24, 2025
Instagram post from Mariana Checheliuk, Dated March 2, 2025
Report by NDTV, Dated March 26, 2015