Fact Check
போலீசிடம் நிற்காமல் போலீஸ் அதிகாரியையும் தூக்கி சென்ற திமுக லாரி; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Claim
போலீசிடம் நிற்காமல் போலீஸ் அதிகாரியையும் தூக்கி சென்ற திமுக லாரி.
Fact
இத்தகவல் தவறானதாகும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் கடத்தி செல்லப்பட்ட லாரியை போலீஸ் மடக்கி பிடித்த சம்பவமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“திமுக காரனே போலீஸ்னா நிக்க மாட்டான்.. திமுக காரன் லாரி மட்டும் நிக்கவா போகுது. போலீஸையும் தூக்கிட்டு போகும்ல அதான் திமுக” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
Fact Check/Verification
திமுகவை சார்ந்தவரின் லாரி ஒன்று போலீசிடம் நிற்காமல் போலீஸ் அதிகாரியையும் தூக்கி சென்றதாக வீடியோத்தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அதில் தந்தி டிவியில் கடந்த செவ்வாயன்று (மே 20) இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றதாகவும், போக்குவரத்து காவலர் முருகன் என்பவர் லாரியில் ஏறி, லாரியை நிறுத்த முயன்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தினமலர் இச்சம்பவம் குறித்து வெளியிட்டிருந்த செய்தியில் லாரியை கடத்தி சென்றவர் பெயர் சுபாஷ் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தையடுத்து சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டதாகவும் ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் சுபாஷ் குறித்து பாலிமர் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் சுபாஷ் ஏற்கனவே மனநிலை சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் சிகிச்சை எடுத்து குணமாகியதாகவும், தாயின் மரணத்திற்கு பின் மீண்டும் மனநிலை தவறி இதுப்போன்ற செயல்களை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் கடத்தப்பட்ட லாரியின் உரிமையாளர் போலீஸ் அதிகாரி பாலமுருகன் வீட்டிற்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து, அவருக்கு நன்றி தெரிவித்ததாக தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வீடியோவில் காணப்படும் லாரி மனநிலை சரியில்லாத ஒருவரால் கடத்தப்பட்டுள்ளது. லாரியை தடுத்து நிறுத்தவே போலீஸ் அதிகாரி முருகன் லாரியில் தொங்கியபடி சென்றுள்ளார். மற்றபடி திமுககாரரின் லாரி என்பதால் அந்த லாரி போலீசின் உத்தரவை மதிக்காததாகவும், தடுக்க வந்த போலீசையும் தூக்கி சென்றதாகவும் பரப்பப்படும் தகவல் முற்றிலும் கட்டுக்கதையாகும்.
Also Read: இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
திமுகவை சார்ந்தவரின் லாரி ஒன்று போலீசிடம் நிற்காமல் போலீஸ் அதிகாரியையும் தூக்கி சென்றதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் கடத்தி செல்லப்பட்ட லாரியை போலீஸ் மடக்கி பிடித்த சம்பவமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from Thanthi TV, Dated May 20, 2025
Report from Dinamalar, Dated May 21, 2025
Report from One India Tamil, Dated May 21, 2025
Report from Polimer News, Dated May 22, 2025
Report from Thanthi TV, Dated May 22, 2025