Fact Check
தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தினாரா?
Claim
தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தினார்.
Fact
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.
தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டமா இது?
Fact Check/Verification
தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து தினமலரில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்கு செல்லும் வழியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகம் முன்பு சுந்தரராஜன் எனும் சமூக ஆர்வலர் சாலையில் தேங்கியிருந்த நீரில் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் பாண்டி மிர்ரர் எனும் எக்ஸ் பக்கத்தில் சுந்தரராஜன் பேசிய வீடியோ வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலும் இச்சம்பவம் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், கலாட்டா மீடியா உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தேடுகையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சுந்தரராஜன் புதுச்சேரியில் ஏற்கனவே இதுப்போன்ற நூதன போராட்டங்களை செய்திருப்பதை காண முடிந்தது. அதுக்குறித்த செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Conclusion
தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோவில் காணப்படும் சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Media report by Dinamalar, dated August 19, 2025
Media report by Indian Express Tamil, dated August 18, 2025
Media report by Galatta Media, dated August 19, 2025
X post by Pondy Mirror, dated August 19, 2025