Claim: இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்.
Fact: வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.
“மனிதநேயம் என்றால் என்ன என்று சீமானின் கிளாஸ் மேட் கஸ்தூரிக்கு தெரியுமா? ஒரு இஸ்லாமிய தம்பதியின் மனித நேயத்தை பாருங்கள்..” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவில் கோவிலிலிருந்து வெளியே வந்த ஆணும் பெண்ணும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின் இருக்கையில் இருந்த பெண்ணின் தாவணி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது. உடனே கூட வந்த ஆண் சக்கரத்திலிருந்து தாவணியை பிரிக்க முயல்கின்றார்.
அச்சமயம் அவ்வழியே ஒரு இஸ்லாமிய தம்பதியினர் வருகின்றனர். விஷயம் அறிந்த உடன் அந்த இஸ்லாமிய கணவர் தாவணியை எடுக்க அந்த ஆணுக்கு உதவுகின்றார். அதேநேரத்தில் அந்த இஸ்லாமியப் பெண் தாவணி இல்லாமல் இருக்கும் பெண்ணுக்கு தன் புர்காவை கழற்றி அணிவித்து விடுகின்றார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?
Fact Check/Verification
இந்து பெண்ணுக்கு புர்கா தந்து இஸ்லாமியப் பெண் மானத்தை காப்பாற்றியதாக பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை ஆகஸ்ட் 01, 2022 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. சஞ்சனா கல்ரானி பகிர்ந்திருந்த இவ்வீடியோவில் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுப்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது.

சஞ்சனா கல்ரானி இதுபோன்று விழிப்புணர்வு வீடியோக்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.

ஏற்கனவே ‘Health is Wealth’ என்று தலைப்பிட்டு இவர் வெளியிட்டிருந்த வீடியோவை, கோவை பிஎஸ்ஜி கல்லூரி அருகே சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்யப்பட்டதாக திரித்து பரப்பப்பட்ட நிலையில், அவ்வீடியோவை குறித்து நியூஸ்செக்கர் தரப்பிலிருந்து ஆய்வு செய்து அதன் உண்மை நிலை குறித்து விளக்கியிருந்தோம்.
Also Read: மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?
Conclusion
இந்து பெண்ணுக்கு புர்கா தந்து இஸ்லாமியப் பெண் மானத்தை காப்பாற்றியதாக பரப்பப்படும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook post from Actress Sanjjanaa Galrani, Dated August 01, 2022
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்