தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36 சதவீதம் ஆதரவுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலிடத்தில் இருப்பதாய் சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் இந்தியா டுடே சி வோட்டர் அமைப்புடன் இணைந்து தமிழக அரசியல் குறித்து கருத்துக்கணிப்பு எடுத்து அதுக்குறித்த வீடியோக்களை அதன் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் ஒன்றாக தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக மக்கள் விரும்பும் நபர் குறித்த கருத்துக்கணிப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த கருத்துக்கணிப்பில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் இருப்பதை காண முடிந்தது. அவரையடுத்து விஜய், ஈபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் முறையே 18 சதவீதம், 10 சதவீதம், 9 சதவீதம் பெற்று இரண்டு, மூன்று, நான்கு இடங்களை பெற்றிருப்பதை காண முடிந்தது.

இந்த நால்வரை தவிர்த்து வேறு எந்த அரசியல் தலைவர் குறித்தும் இக்கருத்துக்கணிப்பில் தெரிவித்திருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் புதிய தலைமுறை அந்த நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது. மாறாக “அடுத்த முதல்வருக்கான பந்தயம் 2-ஆவது இடத்தில் விஜய்” என்று தலைப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், புதிய தலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ்கார்டில் அன்புமணியின் புகைப்படம் சேர்க்கப்பட்டு, ஸ்டாலின் என்பதற்கு பதிலாக அன்புமணி என்றும், 27 சதவீதத்தை 36 சதவீதம் என்றும் மாற்றி வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்துக்கொள்ள முடிந்தது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும், வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தார்.
Also Read: அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்றாரா செம்மலை?
Conclusion
அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும். சி வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்து புதிய தலைமுறை வெளியிடிருந்த நியூஸ்கார்டில் அன்புமணியின் பெயரோ/புகைப்படமோ இடம்பெற்றிருக்கவில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by India Today, dated March 28, 2025
Report by Puthiya Thalaimurai, dated March 29, 2025
Phone Conversation With Ivany, Digital Head, Puthiya Thalaimurai