Fact Check
நிர்மலா சீதாராமன் ‘டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்’ என்றாரா?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊட்டி மலை ரயிலில் பயணிக்க 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஏன் ஊட்டி செல்ல ஆசைப்படவேண்டும் என்று கூறியதாக புகைப்படச்செய்தி ஒன்று பரவி வருகின்றது.

Fact Check/Verification:
ஊட்டி மலை ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக செய்தி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து நாம் ஏற்கனவே ஆராய்ந்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.
இந்நிலையில், “ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்?” என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக பிரபல ஊடகம் வெளியிட்டது போன்று புகைப்படம் ஒன்று ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி போன்ற நியூஸ் கார்டாக பரவும் இத்தகவல், பலராலும் வைரலாக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, ஊட்டி மலை ரயில் தனியார் மயம் என்று பரவும் செய்தி குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ள நியூஸ்செக்கர் சார்பில், இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்து அறிய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியாகிய இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து ஆராய்ந்து அறிய, புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படமும், அதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் செய்தியும் போலியானது என்றும், அது போன்ற செய்தியைத் தாங்கள் வெளியிடவில்லை என்றும் புதிய தலைமுறை வெளியிட்டிருந்த மறுப்புத் தகவல், அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து நமக்குக் கிடைத்தது.
மேலும், புதிய தலைமுறையின் டிசம்பர் 7ம் தேதி வெளியான நியூஸ்கார்டுகளை எடுத்து அதில் போட்டோஷாப் மூலமாக இச்செய்தி மற்றும் நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தை இணைத்துள்ளதையும் நம்மால் கண்டறிய முடிந்தது.


இதன்மூலம், நமக்குத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் நிர்மலா சீதாராமன், ஊட்டி மலை ரயில் குறித்து தெரிவித்த சர்ச்சைக் கருத்து எனப்பரவும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.
Conclusion:
டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
Result: Fabricated
Our Sources:
Puthiyathalaimurai Twitter: https://twitter.com/PTTVOnlineNews/status/1336632553810247680?s=20
NewsChecker: https://tamil.newschecker.in/fact-checks/news/the-ooty-mountain-train-service-has-rumored-to-be-hand-over-to-private/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)