Fact Check
ஆபரேஷன் சிந்தூரால் கொல்லப்பட்ட தீவிரவாதியை கண்டு மக்கள் அழுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
ஆபரேஷன் சிந்தூரால் கொல்லப்பட்ட தீவிரவாதியை கண்டு மக்கள் அழுவதாக பரவும் வீடியோ.
Fact
இத்தகவல் தவறானதாகும். காசாவில் கடந்த மார்ச் மாதம் அல் ஜஸீரா நிறுவனத்தை சார்ந்த ஊடகவியலாளர் இஸ்ரேலிய படையால் கொல்லப்பட்டார். அந்த ஊடகவியலாளரின் உடலை பார்த்து மக்கள் அழும் வீடியோவே இவ்வாறு பரப்பப்பபடுகின்றது.
பஹ்லகாமில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த கொட்டூர தாக்குதல் காரணமாக 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் நேற்றைய முன் தினம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று NDTV செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடலை பார்த்து மக்கள் அழுது கதறுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
ஆபரேஷன் சிந்தூரால் கொல்லப்பட்ட தீவிரவாதியை கண்டு மக்கள் அழுவதாக பரவும் வீடியோவில் ‘shady_atall’ என்கிற வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ஷாதி அடல்லா (Shadi Atallah) எனும் பாலஸ்தீன போட்டோ ஜர்னலஸ்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 25, 2025 அன்றே வைரலாகும் இவ்வீடியோ பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது பஹல்காம் தாக்குதல் நடந்த தினத்திற்கு (ஏப்ரல் 22, 2025) ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிடப்பட்டிருந்தது.

இவ்வீடியோவின் கேப்ஷனில் ஊடகவியலாளர் ஹோஸ்சம் ஷபத் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீடியோவிலும் ஹோஸ்சம் என்ற பெயரை கூறி மக்கள் அழுவதை கேட்க முடிந்தது.
ஹோஸ்சம் மரணம் குறித்த வேறு சில வீடியோக்களையும் அடல்லா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து தேடுகையில் காஸாவில் அல் ஜசீரா ஊடகவியலாளர் ஹோஸ்சம் ஷபத் இஸ்ரேலிய படையால் கொல்லப்பட்டதாக அல் ஜஸீரா மார்ச் 24, 2025 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண் முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களிலும் இம்மரணம் குறித்து செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் ஆபரேஷன் சிந்தூருக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகின்றது.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
ஆபரேஷன் சிந்தூரால் கொல்லப்பட்ட தீவிரவாதியை கண்டு மக்கள் அழுவதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். காசாவில் கடந்த மார்ச் மாதம் அல் ஜஸீரா நிறுவனத்தை சார்ந்த ஊடகவியலாளர் இஸ்ரேலிய படையால் கொல்லப்பட்டார். அந்த ஊடகவியலாளரின் உடலை பார்த்து மக்கள் அழும் வீடியோவே இவ்வாறு பரப்பப்பபடுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post from Shadi Atallah, Palestinian Photo Journalist, Dated March 25, 2025
Report from Al Jazeera, Dated March 24, 2025