பேட்மிண்டனில் இருந்து, இளம் வயதிலேயே ஓய்வு பெறுகிறார் இந்தியாவின் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான பி.வி.சிந்து என்கிற செய்திதான் இன்று சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் ஹாட்டாக பரவி வருகின்ற டாபிக்.

‘நான் ஓய்வு பெறுகிறேன்’ (I retired) என்கிற பி.வி.சிந்துவின் ட்விட்டர் அறிக்கை ஒன்றினைத் தொடர்ந்துதான் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Fact Check/Verification:
பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். அவர், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறி சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டிருந்தார். அதில், ‘நான் ஓய்வு பெறுகிறேன்’ என்கிற வாசகம் தலைப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், `இவ்வளவு சிறிய வயதில் பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சிந்து; பி.வி.சிந்து தனது 25வது வயதிலேயே ஓய்வினை அறிவித்துள்ளார்’ என்றெல்லாம் சமூக வலைத்தள வாசிகளும், சில ஊடகங்களும் இதனை செய்தியாக பரப்ப ஆரம்பித்தனர்.
சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போன்று பரவி ட்ரெண்ட் ஆன இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்தும், பி.வி.சிந்துவின் உண்மையான அறிக்கை குறித்தும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு விளக்கமளிக்க முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
பி.வி.சிந்து ஓய்வு பெறுகிறார் என்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், சமூக வலைத்தளத்திலேயே பலரும் ‘அறிக்கையை முழுவதுமாக படியுங்கள்’ என்றெல்லாம் பதிவிட்டிருந்தனர்.
உண்மையில், பி.வி.சிந்துவின் சமூக வலைத்தள அறிக்கையை நாம் முழுவதுமாக படித்த போது, அதன் உண்மையான சாரம்சம் நமக்குத் தெரிய வந்தது.
பி.வி. சிந்துவின் அறிக்கை கொரோனா பற்றிய பயத்திலிருந்து அவர் ஓய்வு பெறுவதாகவே கூறுகிறதே தவிர, அவர் பேட்மிண்டன் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவிக்கவில்லை.
இதற்கான விளக்கத்தை அவர் அதே அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தான் கொரோனா பயத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருப்பதாகவும், கொரோனா குறித்த அச்சத்தில் இருந்து தான் வெளிவந்து கொண்டிருப்பதாகவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவே ‘ஓய்வு’ என்கிற வார்த்தையை பதிவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவினை இங்கே இணைத்துள்ளோம்.
இதனால், மேலோட்டமாக அவரது ‘ஓய்வு பெறுகிறேன்’ என்கிற வாசகம் பிரதியிடப்பட்ட அறிக்கையை மட்டும் படித்துவிட்டு, உள்ளடங்கிய தகவல்களைப் படிக்காமல் சமூக வலைத்தளவாசிகளும், சில ஊடகங்களும் பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவதாக தெரிவித்துவிட்டனர் என்பது இதிலிருந்து நமக்குத் தெளிவாகியுள்ளது.
conclusion:
எனவே, சமூக வலைத்தளப்பக்கங்களும் ஊடகங்களும், பி.வி.சிந்து பேட்மிண்டன் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக பரப்பிய செய்தி முற்றிலும் தவறான புரிதலாகும் என்பதை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.
மேலும், எந்தவொரு செய்தியையும் தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, முழுமையாக நம்ப வேண்டாம் என்றும்; ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் நமது நியூஸ் செக்கர் தமிழ் சார்பாக வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
Result: Misleading/Partly False
Our sources:
P.V.Sindhu: https://twitter.com/Pvsindhu1
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)